அஞ்சல- விமர்சனம்

anjala-6

சுதந்திர போராட்ட கால பின்னணி கொண்ட தாத்தா காலத்து ‘அஞ்சல’ டீக்கடையை தொடர்ந்து நடத்திவருகிறார் பசுபதி.. டீக்கடையை தங்களது இன்னொரு வீடாக கருதும் விமல் மற்றும் நண்பர்கள் குழுவுக்கு டீக்கடையே கதி.. அரசாங்கத்தின் சாலை விரிவாக்க நடைமுறையால் டீக்கடையை இடிக்கும் அளவுக்கு எதிர்பாராத சிக்கல் வருகிறது. இது டீக்கடை நண்பர்களுக்குள் பிளவை ஏற்படுத்துகிறது.. இதிலிருந்து இவர்காள் அனைவராலும் மீண்டுவர முடிந்ததா என்பதுதான் மீதிப்படம்.

ஒரு தெருவில் இருக்கும் டீக்கடை என்பது ஒருவரின் வியாபாரம் சார்ந்தது மட்டுமில்லை, இவை பல தலைமுறைகளின் ஒருங்கினைப்பு, சமுதாய மாற்றத்திற்கான அடையாளம் என்பதை மிக அழுத்தமாக கூற முயன்றுள்ளது இந்த அஞ்சல.

இவரை ஏன் இன்னும் தமிழ் சினிமா முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் பசுபதி நடித்த ஒவ்வொரு படத்தை பார்க்கும்போதும் எழும்.. இந்தப்படத்திலும் அதே பீலிங்கை நமுக்குள் புகுத்தி அனுப்பிவிடுகிறார் பசுபதி.. அதேபோல தனது நடிப்பில் வழக்கமாக காட்டும் ‘கெத்து-உதார்’ பாணியை இந்தப்படத்திலாவது விட்டுவிட மாட்டாரா என எதிர்பார்க்கவைத்து ஏமாற்றுகிறார் விமல்..

கொடுத்த வேலைக்கு குந்தகம் இல்லாமல் அதேசமயம் படத்தின் மூலப்பிரச்சனைக்கு திரி கிள்ளும் கதாபாத்திரத்தில் அட்டகத்தி நந்திதா சிறப்பு. கோபி சுந்தரின் இசையில் ‘கண் ஜாடை’ பாட்டு ரசிக்க வைக்க, பின்னணி இசையிலும் கலக்குகின்றார். ரவி கண்ணனின் ஒளிப்பதிவு டீக்கடை, கிராம மக்கள் என நம் கண்முன் காட்டினாலும் சில நேரங்களில் குறும்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஒரு சமுதாய மாற்றமே இந்த சின்ன டீக்கடையில் இருந்து ஆரம்பிக்கின்றது என்கிற ப்ளாஷ் பேக் காட்சியில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குனர் தங்கம் சரவணன். இருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தை அவரால் அழுத்தமாக பதியவைக்க முடியாமல் திரைக்கதை அவரை அலைக்கழித்து இருப்பது நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் படத்தின் கிளைமாக்ஸை யாரும் எதிர்பாராவிதமாக முடித்து இருக்கும் விதம் ‘பரவாயில்லையே’ சொல்லவைக்கிறது.