அனேகன் – விமர்சனம்

 

மூன்று ஜென்மங்களில் இணையமுடியாத காதலர்கள் நான்காவது ஜென்மத்திலாவது இணைந்தார்களா என்கிற பூர்வ ஜென்ம கதைக்கு மாடர்ன் டெக்னாலஜி கோட்டிங் கொடுத்திருக்கிறார்கள்.

கார்த்திக் நடத்திவரும் வீடியோ கேம்ஸ் உருவாக்கும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்ப்பவர் அமைரா தஸ்தூர்.. அவருக்கு அடிக்கடி தனது முன் ஜென்ம நிகழ்வுகள் ஞாபகம் வருகிறது.. ஆனால் ஒவ்வொரு ஜென்மத்திலும் காதலராக வருவது தனுஷ் தான்.. நான்காவது ஜென்மமான இந்த மாடர்ன் யுகத்தில் தன்னுடன் வேலைபார்க்கும் தனுஷை கண்டுகொண்டு அவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார் அமைரா.

தனுஷும் அமைரா சொல்லும் பூர்வ ஜென்ம கதைகளை நம்பாவிட்டாலும், அவரது அன்பினால் ஈர்க்கப்பட்டு அவரை விரும்ப தொடங்குகிறார்.. ஆனால் அமைரா நம்புவது போல இந்த ஜென்மத்திலும் தங்களை பிரிக்க சதி நடைபெறுவதை கடைசி நேரத்தில் உணர்கிறார் தனுஷ். சதிகாரன் யார்.. சதியை முறியடித்து காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

ஒரு கெட்டப் என்றாலே தனுஷ் காட்டு காட்டென்று காட்டுவார்.. நாலு ஜென்மம்.. அதில் நாலு கெட்டப் என்றால் கேட்கணுமா? சும்மா ‘மாவீரன்’ போல புகுந்து விளையாடுகிறார். மாடர்ன் யுக காதலில் அமைராவுடன் குறும்பு பண்ணினாலும் மற்ற ஜென்மங்களில் காதலால் கசிந்து உருகியிருக்கிறார். குறிப்பாக ரங்கூன் இளமாறன் கதாபாத்திரத்தில் ‘இளமை துள்ளு’கிறது. தங்கள் இருவரையும் சுடாமல் கதைபேசும் வில்லனிடம் தனுஷ் நக்கல் அடிக்கும் காட்சியும் அவரைப்போலவே மிமிக்ரி பண்ணும் காட்சியும் செம க்ளாப்ஸ் அள்ளுகின்றன.

எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சிக்கு காட்சி தனது முகபாவங்களால் நம்மை அசத்துகிறார் அமைரா தஸ்தூர்.. தனுஷிடம் பூர்வ ஜென்ம கதைகளை அள்ளிவிடும் நேரங்களில் அவரது நடிப்பில் ‘சந்தோஷ் சுப்ரமண்யம்’ ஜெனிலியாவின் அப்பாவி குறும்புத்தனம் எட்டிப்பார்க்கிறது. சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் வில்லித்தனம் காட்டும் ஐஸ்வர்யா தேவனின் நடிப்பு பர்பெக்ட்..

முதல் பாதியில் பத்தோடு பதினொன்றாக சாதராண மனிதராக வந்துபோகும் நவரச நாயகன் கார்த்திக், கடைசி அரைமணி நேரத்தை தன் கையில் எடுத்துக்கொள்கிறார். அதிலும் இளமை ததும்பும் கெட்டப்பில் பெண் பார்க்க வரும்போதும், அவருக்கும் பெண்களுக்குமான தொடர்பை பற்றி சொல்லும்போதும் தியேட்டரில் சிரிப்புடன் கூடிய கைதட்டல் பறக்கிறது.

ஆசிஷ் வித்யார்த்தி, முகேஷ் திவாரி இருவரும் ஒவ்வொரு ஜென்மத்திலும் தங்களது கதாபாத்திரங்களை மாறுபட்டதாக காட்டுவதில் சிரத்தை எடுத்திருக்கிறார்கள். டாக்டராக வரும் லேனாவுக்கு இனி தமிழில் வாய்ப்புகள் தேடிவரும் அளவுக்கு நிறைவான நடிப்பை தந்திருக்கிறார். அளவான, ஆனால் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைக்கும் பொறுப்பை ஜெகன் சரியாக செய்திருக்கிறார்.

ஹாரிஸின் இசையில் ‘டங்காமாரி’ பாடல் உட்பட இன்னும் இரண்டு பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கின்றன. ஆனால் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளின் பின்னணியில் இரைச்சலாக வெளிப்படும் பின்னணி இசைக்கு கொஞ்சம் கடிவாளம் போட்டிருக்கலாமே சார்…

நம்மால் ரங்கூன் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனையாக கூட நினைத்துப்பார்க்க முடியாது.. ஆனால் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ரங்கூனிலேயே நம்மை உலாவவிட்டிருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல அவ்வளவு அழகு.. அவ்வளவு ரிச்னெஸ்..

கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வதுபோல எடிட்டிங்கில் கொஞ்சம் அசந்திருந்தாலும் படம் சாதாரண ஆடியன்ஸுக்கு புரியாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் ஆண்டனியின் சாதுர்யமான படத்தொகுப்பு ஆளில்லாத நெடுஞ்சாலையில் பயணிப்பது போல படத்தை சிக்கலில்லாமல் நகர்த்தி செல்கிறது. முந்தைய காலகட்டங்களை தத்ரூபமாக கண் முன் கொண்டு வந்ததில் ஆர்ட் டைரக்டர் கிரணின் விரலுக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசளிக்கலாம் போல தோன்றுகிறது.

நான்கு விதமான வண்ண வயர்களால் நாற்காலி பின்னும்போது ஏற்படும் சிக்கலை லாவகமாக கையாளும் கலைஞன் போல, சாதாரண ரசிகனுக்கும் புரியும்படி திரைக்கதையை செதுக்கியுள்ளார்கள் இயக்குனர் கே.வி.ஆனந்த்தும் கதாசிரியர்கள் சுபாவும்.. ஒவ்வொரு ஜென்மத்தையும் மற்றொன்றுடன் தொடர்புபடுத்திய விதம் மற்றும் ரசிகர்களின் பல்ஸை எகிரவைக்கும் ட்விஸ்ட் என படத்தை எங்கேயும் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

மொத்தத்தில் இலையில் வைக்கப்பட்ட அனைத்து பதார்த்தங்களையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடவைத்தால் அந்த விருந்து எப்படி இருக்கும்..? அனேகனும் அப்படி ஒரு விருந்து தான்.