அன்பிற்கினியாள் – விமர்சனம்

நடிகர்கள் : அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீன் ராஜா, பூபதி ராஜா, ரவீந்திர விஜய் மற்றும் பலர்
ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசாமி
இசை : ஜாவித் ரியாஸ்
இயக்கம் : கோகுல்

மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘ஹெலன்’ படத்தை தமிழில் அன்பிற்கினியாளாக மாற்றியுள்ளனர்.

ஒரு ஷாப்பிங் மாலில் உள்ள சிக்கன் கடையில் வேலை பார்த்துக்கொண்டே, வீட்டுக்கடனை அடைப்பதற்காக வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சிக்கிறார் கீர்த்தி பாண்டியன். ஒரே மகள் என்பதால் அரை மனதாக சம்மதிக்கிறார் தந்தை அருண்பாண்டியன். இடையில் கீர்த்தி, தனது காதலனுடன் டூவீலரில் பயணிக்கும்போது போலீஸ் சோதனையில் சிக்கி ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட, விவரம் அருண்பாண்டியனுக்கு தெரிய வருகிறது. மகளின் காதல் கொடுத்த அதிர்ச்சியை விட, அவன் வேற்று மதத்தை சேர்ந்த பையன் என்பதால் அப்செட் ஆகும் அருண்பாண்டியன் மகளிடம் பேசவே மறுக்கிறார்.

மறுநாள் வேலைக்கு செல்லும் கீர்த்தி, தந்தையின் பாராமுகம் காரணமாக இரவு தாமதமாகவே வீட்டுக்கு கிளம்புகிறார். இந்தநிலையில் எதிர்பாராத விதமாக கடையின் உள்ளே இருக்கும் குளிர்சாதன அறையில் மாட்டிக்கொள்கிறார் கீர்த்தி. எந்தவித தகவல் தொடர்பும் இல்லாத நிலையில் கீர்த்தி பாண்டியன் நிலை என்ன ஆனது..? அவர் தப்பித்தாரா..? இலக்கில்லாமல் கீர்த்தியை தேடும் அவரது தந்தையும் காதலரும் உண்மை தெரிந்து அவரை கண்டுபிடித்து காப்பற்றினார்களா என்பது மீதிக்கதை.

நாயகியை மையப்படுத்திய கதை.. அதில் அன்பிற்கினியாளாக அழகாக பொருந்தி இருக்கிறார் கீர்த்தி பாண்டியன். பூட்டிய அறைக்குள் மாட்டிய பின்பு, இவர் படும் அவஸ்தைகளை பார்க்கும்போது எப்படியாவது இந்தப்பெண் தப்பித்துவிட மாட்டாளா என நம்மை எண்ணவைக்கும் அளவுக்கு மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.

கீர்த்தியின் நிஜ தந்தையான அருண்பாண்டியனே படத்திலும் தந்தையாக நடித்துள்ளார். தாயில்லாத ஒரே மகளை வளர்க்கும் தகப்பனின் பாசத்தையும் பரிதவிப்பையும் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகன் பிரவீன் ராஜா வழக்கம் போல சராசரி நடிப்புடன் கடந்து போகிறார். அதேசமயம் போலீஸ்காரராக வரும் ரவீந்திரன் விஜய் மற்றும் சிக்கன் கடையின் மேலாளராக நடித்துள்ள பூபதி ராஜா இருவரும் தங்களது வித்தியாசமான வில்லத்தன நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகின்றனர். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவர்களை தேடி வருவது உறுதி.

இடைவேளைக்கு பிறகு நம்மை தனது பின்னணி இசையால் பதைபதைப்புடன் இருக்கும் விதமாக கட்டிப்போட்டு விடுகிறார் இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு அந்த மாலுக்குள் நாமே சிக்கிக்கொண்ட உணர்வை ஏற்படுத்துகிறது.

மலையாள படங்களை அதன் உயிர் கெடாமல் கொடுப்பதில் தான் அதன் வெற்றி அமைந்திருக்கிறது. பல படைப்பாளிகள் அதில் சறுக்கி விடுகின்றனர். ஆனால் எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய கதை என்பதால் இயக்குனர் கோகுல் இரண்டு மணி நேரமும் படத்துடன் ரசிகர்களை கட்டிப்போட்டு விடுவதில் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்..

மொத்தத்தில் இந்த அன்பிற்கினியாள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறாள்