“என் பேரு சூர்யா” ; வீரமுழக்கமிடும் அல்லு அர்ஜூன்

en peru surya

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி ஹீரோ அல்லு அர்ஜூன்.. இவருக்கு தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இவர் நடித்துள்ள படம் ‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’. சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தற்போது தமிழில் ‘என் பேரு சூர்யா என் வீடு இந்தியா’ என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.

பிரபல கதாசிரியரான வக்கந்தம் வம்சி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக துப்பறிவாளன் புகழ் அனு இம்மானுவேல் நடித்துள்ளார். இந்தப்படத்தை தமிழில் சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது. வரும் மே மாதம் ரிலீஸாக உள்ள இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா முன்னிலையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீதர் லகடபாபு படம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

“முதலில் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் எடுக்க திட்டமிட்டோம்.. மூன்று மொழிகளுக்கும் பொதுவான காட்சிகளை முதலில் எடுத்து விட்டு பின்பு ஹிந்தி, தமிழுக்கு தனியாக காட்சிகள் எடுக்க முடிவு செய்தோம். ஆனால் அதற்குள் சினிமா ஸ்டிரைக் வந்து விட்டதால் எங்களால் தமிழ் காட்சிகளை எடுக்க முடியவில்லை. அதனால் இப்போது தெலுங்கு, இந்தியில் மட்டும் நேரடி படமாகவும், தமிழில் டப்பிங் படமாகவும் வெளிவருகிறது. ஆனாலும் டப்பிங் படம் என்று தெரியாத அளவிற்கு நிறைய செலவு செய்திருக்கிறோம்

தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் இந்தப் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்க காரணம் இது தேசப்பற்றை வலியுறுத்தும் ராணுவம் தொடர்புடைய படம். எல்லா மொழி ரசிகர்களும் விரும்பும் விதமான கதை. இந்தப் படத்தின் கருத்து மொத்த இந்தியாவுக்கும் போக வேண்டும் என்று நினைத்தோம்.

தமிழில் நேரடியாக தயாரிக்க முடிவு செய்ததால் தான் சரத்குமார், அர்ஜுன், நதியா, அனு இமானுவேல், சாருஹாசன், சாய்குமார், ஹரீஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்களை நடிக்க வைத்தோம். படத்தை வி.வம்சி இயக்கி இருக்கிறார், ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், விஷால் சேகர் இசை அமைத்திருக்கிறார்” என கூறினார் தயாரிப்பாளர் ஸ்ரீதர்.