அப்புக்குட்டியை ஆளையே மாற்றிய அஜித்..!

‘வீரம்’ படத்தில் ‘தம்பி மயில்வாகனம்’ என அப்புக்குட்டியை அன்புடன் அழைக்கும் அஜித், அவரது திருமணத்தின்போது தனது கடை ஒன்றை அவருக்கு அவரது கல்யாணப்பரிசாக தந்து நெகிழ வைப்பார். கிட்டத்தட்ட நிஜத்திலும் அதே போன்றதொரு நெகிழ வைக்கும் செயலால் அப்புக்குட்டியை அசரடித்து விட்டார் அஜித்.

பொதுவாக அனைத்து படங்களிலும் அப்புக்குட்டியின் தோற்றம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இதை ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பில் அப்புக்குட்டியிடமே சொன்ன அஜித், வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்க முயற்சி செய்யுங்கள் என கூறியுள்ளார். என்னை யார் அண்ணே அதுபோல மாற்றப்போகிறார்கள் என அப்போது இயலாமையுடன் பதில் சொன்னார் அப்புக்குட்டி.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் அப்புக்குட்டிக்கு போன் போட்ட அஜித், அவர் ஜூன்-29ல் ப்ரீயாக இருக்கிறாரா என கேட்டு, அவரை அழைத்து வரச்செய்தார்.. வரச்சொன்ன இடம் ஒரு ஸ்டுடியோ.. அங்கே அப்புக்குட்டிக்கு தேவையான விதவிதமான காஸ்ட்யூம்கள் ஏற்கனவே ரெடியாக இருந்தன.

காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் மேக்கப்மேன் உதவியால் அப்புக்குட்டியை விதவிதமான கெட்டப்புகளில் ஆளையே மாற்றி தானே போட்டோஷூட் நடத்தி முடித்தார் அஜித். இதையெல்லாம் எதிர்பாராத அப்புக்குட்டி பிரமிப்பின் எல்லைக்கே சென்றுவிட்டாராம். அதுமட்டுமல்ல, அப்புக்குட்டியை சிவபாலன் என்கிற அவரது ஒரிஜினல் பெயரை சொல்லியே அழைத்தாராம் அஜித்.

ஆனால் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதும் அஜித் அப்புக்குட்டியை வைத்து ஷார்ட் பிலிம் எடுக்கப் போகிறார் என வேறு மாதிரியான செய்திகள் பரவத்தொடங்கின. ஆனால் அப்புக்குட்டியும் அஜித்தின் பி.ஆர்.ஓவும் இந்தப்படங்கள் எதற்காக எடுக்கப்பட்டன என்கிற உண்மையை கூறி அந்த வதந்திக்கு உடனே முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.