“காக்கா முட்டையில் நடிக்காதே என பயமுறுத்தினார்கள்” – ஐஸ்வர்யா

இப்போதும் கூட எந்த சேனலை திருப்பினாலும் ‘ரம்மி’ படத்தில் விஜய்சேதுபதியும் ஐஸ்வர்யாவும் பாடுகின்ற அற்புதமான மெலடியான ‘கூட மேல கூட வச்சு’ பாடலை பார்க்காம இருக்கிறதுக்கான வாய்ப்பு ரொம்பவே குறைவுதான். விஜய் சேதுபதியைவிட ஐஸ்வர்யாவுக்கு அந்தப்பாடல் மிகப்பெரிய அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் வழங்கியது.

இப்போது ஐஸ்வர்யாவுக்கு பெருமையாக சொல்லிக்கொள்ளும்படியான இன்னொரு அடையாளம் தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்துள்ளது. தேசியவிருது பெற்ற படத்தில் தானும் நடித்திருப்பது, தானே தேசியவிருது பெற்ற சந்தோஷத்தை அவருக்கு தந்திருப்பது உண்மை.

‘காக்க முட்டை’ படத்தின் ட்ரெய்லர் அறிமுக விழாவில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா, “இந்தப்படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டபோது நிறைய பேர், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கப்போறியா.. வேண்டாம் என என்னை பயமுறுத்தினார்கள். ஆனால் நடிப்பு என வந்துவிட்ட பிறகு எந்த சவாலான கேரக்டரிலும் நடிக்கவேண்டும். அதை சேலஞ்சாக எடுத்துக்கொண்டேன். இன்று படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளதை பார்க்கும்போது நான் எடுத்த முடிவு சரியானது என்பது தெரிகிறது. இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு இயக்குனர் மணிகண்டனுக்கும் தயாரிப்பாளர்களான தனுஷ், வெற்றி மாறன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்