அடுத்த சாட்டை – விமர்சனம்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தற்போது அடுத்த சாட்டை என்கிற பெயரில் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார்கள்.. சமுத்திரகனி, தம்பி ராமையா என்கிற அதே நபர்களுடன் இந்த படத்தை கல்லூரி களத்தில் நடக்கும் கதையம்சத்துடன் உருவாக்கியுள்ளார்கள்.

தம்பி ராமையா பிரின்ஸ்பாலாக வேலை பார்க்கும் கல்லூரியில் சமுத்திரக்கனி பேராசிரியராக இருக்கிறார்.. ஒரு வகுப்பில் படிக்கும் அதுல்யா ரவியை சக மாணவனும் தம்பிராமையாவின் மகனுமான யுவன் விரும்புகிறார்.. ஆனால் அவரை கண்டுகொள்ளாத அதுல்யா இன்னொரு மாணவன் மீது நட்பு செலுத்தி வருகிறார். இதனால் ஆத்திரம் அடையும் யுவன் இதை கல்லுரிக்குள் ஜாதி சண்டையாக மாற்ற முயற்சிக்கிறார்.

இதற்கிடையே கல்லூரியில் ஒழுங்கீனமாக நடக்கும் பேராசிரியர்கள் மீதான குறைகளை சுட்டிக்காட்டும் சமுத்திரக்கனி மாணவர்களுடன் நட்புடன் பழகுவதால் தம்பி ராமையா உள்ளிட்ட சிலர் அவர்மீது குற்றம்சாட்டி வெளியே அனுப்ப துடிக்கின்றனர்.. இந்த சமயத்தில் மாணவர்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அவர்களை வெளியே அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார் சமுத்திரக்கனி..

அந்த நிகழ்ச்சியில் யுவன், மாணவர்களுக்குள் கலவரத்தை மூட்டி விட, அது சமுத்திரக்கனிக்கு கெட்ட பேரை வாங்கி தந்து அவரை சஸ்பெண்ட் செய்ய வைக்கிறது. அதைத்தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் வெடிக்க அதன் பிறகு மாணவர்கள் ஒற்றுமை ஓங்குகிறது. இதனால் தம்பி ராமையா அன் கோவின் கோபம் இன்னும் அதிகமாகி, இது திடீரென எதிர்பாராத விளைவை ஏற்படுத்தி உயிர் பலியில் கொண்டுபோய் நிறுத்துகிறது.. தம்பிராமையாவின் கோபம் யாரை பலி வாங்கியது, சமுத்திரக்கனியின் முயற்சி பலன் கொடுத்ததா என்பது மீதிக்கதை..

வரும் காட்சிகளெல்லாம் அறிவுரை மழையாகப் பொழிகிறார் கம்பீர சமுத்திரக்கனி.. அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாகவே போடலாம்.. கதாநாயகியாக அதுல்யா ரவி, ராஜஸ்ரீ பொன்னப்பா தங்களது இருவரும் இடத்தை நிரப்புகிறார்கள் அவ்வளவே சாட்டை யுவனுக்கு நடிப்பதற்கு ஓரளவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது

என்ன நல்லது செய்தாலும் அதை உணர்ந்து கொள்ளாத முட்டாள்தனமான நபர்கள் இருப்பார்களே அவர்களின் பிரதிபலிப்பாக தம்பி ராமையா, படம் முழுவதும் காட்டுக் கூச்சல் போடுகிறார்.. வைஸ் பிரின்ஸ்பால் ஆக வரும் மூர்த்தி பிரின்ஸ்பால் ஆகும் தனது ஆசையை அவ்வப்போது வெளிப்படுத்தி சிரிக்க வைக்கிறார்.. சேர்மன் மட்டும் கரஸ்பாண்டன்ஸ் இவர்கள் இருவரும் கச்சிதமான தேர்வு..

கல்லூரி என்பது இப்படி இருந்தால் நன்றாக இருக்கும், பேராசிரியர்கள் மாணவர்களை எப்படி அணுக வேண்டும், மாணவர்கள் எவ்வழி நடக்க வேண்டும் என தனது நேர்மையான விருப்பத்தை ஆசையை அடுத்த சட்டையாக இயக்கியுள்ளார் இயக்குனர் அன்பழகன்.. அவர் வீசும் சாட்டை சில நேரம் திரையை தாண்டி படம் பார்க்கும் நம்மையும் பதம் பார்த்துவிட்டு செல்கிறது.