நட்பதிகாரம்-79 ; ‘பெண்ணே’ பாடலை வெளியிடுகிறார் சூர்யா..!

சில வருடங்களுக்கு முன் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ என்கிற காதல் காவியத்தை இயக்கிய இயக்குனர் ரவிச்சந்திரன் தற்போது ‘நட்பதிகாரம்-79’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்தவேளை, மஜ்னு என ரவிச்சந்திரனின் முந்தைய படங்களில் எல்லாம் பாடல்கள் சூப்பர்ஹிட்டாக அமைந்தது நாம் கண்ட வரலாறு..

அந்த அளவுக்கு பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ரவிச்சந்திரன் என்பதால் இந்தப்படத்தின் பாடல்களும் அதேபோல ஹிட்டாகியுள்ளன… அதுமட்டுமல்ல இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ள தீபக் நீலாம்பூர் என்ற புதுமுகம் என்றாலும் கூட ஏ.ஆர்.ரகுமானின் சீடர் என்பதும் படத்தின் மீதான இன்னொரு வித எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ஏற்கனவே பாடல்கள் ஆடியோ வடிவில் வெளியாகி வரவேற்பை பெற்றுவிட்ட நிலையில், படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பெண்ணே’ என்கிற பாடலின் வீடியோவை நடிகர் சூர்யா நாளை வெளியிடுகிறார். சமீபத்தில் தணிக்கை குழுவினரின் பார்வைக்கு அனுப்பப்பட்ட இந்தப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், படத்தை இந்த மாதம் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இதில் பிரபல தயாரிப்பாளர் மல்லியம் ராஜகோபால் மகன் ராஜ்பரத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ரேஷ்மி மேனன் நடிக்க, இவர்கள் தவிர வல்லினம் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த அம்ஜத், தெலுங்கு நடிகை தேஜஸ்வி, ஆகியோர் நடித்துள்ளனர். திருவள்ளுவரை கவுரவப்படுத்தும் வகையில்தான் நட்பதிகாரம்-79 என தலைப்பு வைத்திருக்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன்..