சிவகார்த்திகேயனை மனம் குளிர்வித்த விஜய்சேதுபதி..!

vijaysethupathi-as-sivakarthikeyan

நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும் திரையுலகில் தவிர்க்க முடியாதது இரு துருவ போட்டி.. சம்பந்தட்ட நடிகர்கள் தாங்களாக உருவாக்காவிட்டாலும் ரசிகர்களும் மீடியாவும் சேர்ந்து வலுக்கட்டாயமாக இந்த போட்டியை உருவாக்கி விடுவார்கள்..

இப்படி போட்டி உருவானதாலோ என்னவோ சம்பந்தப்பட்ட இரு துருவ நடிகர்களும் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துக்கொள்வதையோ, ஒருவர் இன்னொருவரை பாராட்டி பேசுவதையோ தவிர்த்து இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறார்கள்..

அதேசமயம் திடீரென ஒரு சந்திப்பை நிகழ்த்தி தங்களை நண்பர்களாகவும் காட்டிக்கொள்கிறார்கள். அல்லது உண்மையிலேயே கூட நட்பு இருக்கலாம்.. ரசிகர்களின் மன திருப்திக்காக தங்களை எதிரிகளாக கூட காட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால் இதெல்லாம் தான் சினிமாவை பரபரப்பில் வைத்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை..

எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு-தனுஷ் என காலத்துக்கேற மாதிரி, தலைமுறைக்கு ஏற்ற மாதிரி பத்து வருடங்களுக்கு ஒருமுறை இருமுனைப்போட்டியாளர்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. மலையாளத்திற்கு போனால் கூட மோகன்லால்-மம்முட்டி, துல்கர்-நிவின்பாலி என இந்த இருதுருவ போட்டிகள் உண்டு.

அந்தவகையில் இப்போதையே ட்ரெண்டில் இருமுனைப்போட்டியாளர்களாக கருதப்படுபவர்கள் சிவகார்த்திகேயனும் விஜய்சேதுபதியும் தான்.. இந்த இருவரும் எந்தவித பின்புலமும் இல்லாமல் தங்களது கடின உழைப்பால் மட்டுமே முன்னேறியவர்கள் என்றாலும், இவர்களுக்குள் கொம்பு சீவிவிட ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது..

ஆனால் இருவரும் ஒரேமேடையில் ஒன்றாக அமர்ந்து, ஒருவரை ஒருவர் ஜாலியாக கலாய்த்துக்கொண்டு நட்பை வெளிபடுத்திய தருணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.. இருந்தாலும் ரசிகர்களின் வதந்திகளும் வம்புகளும் ஓய்ந்த பாடில்லை.. ஆனால் விஜய்சேதுபதி சமீபத்தில் செய்த செயல் ஒன்று சிவகார்த்திகேயனை மட்டுமல்ல, அவரது ரசிகர்களின் மனதையும் குளிர்வித்துவிட்டது..

அப்படி என்ன செய்தார் விஜய்சேதுபதி..? தனது நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் ‘றெக்க’ படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆட்டும் விஜய்சேதுபதி, தியேட்டர் ஒன்றில் ஒட்டப்பட்டிருக்கும் சிவாகார்த்திகேயனின் மான் கராத்தே போஸ்டருக்கு அருகில் நின்று ஆடுவார். அதுமட்டுமல்ல, சிவகார்த்திகேயன் அந்தப்படத்தில் காண்பித்த புகழ்பெற்ற மான் கராத்தே சின்னத்தையும் அவரது ஸ்டைலிலேயே காட்டி ஆடியுள்ளார் விஜய்சேதுபதி..

பொதுவாக ஜூனியர் நடிகர்கள் தங்களது படங்களில் ரஜினி, அஜித், விஜய் ஆகிய நடிகர்களின் போஸ்டர்களையோ, அல்லது அவர்கள் நடித்த படங்களின் வீடியோக்களையோதான் இடம்பெற செய்வார்கள்.. தங்களை அவர்களது ரசிகர்களாக காட்டிக்கொள்ளவே முயல்வார்கள். ஆனால் விஜய்சேதுபதி இதிலிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டுள்ளார்.. என்ன காரணம் என்பதற்கு அவரே விளக்கமும் தந்திருக்கிறார். அது அவர் மீதான மரியாதையை இன்னும் ஒருபடி உயர்த்தியுள்ளது என்றே சொல்லலாம்.

‘றெக்க’ படத்தின் பாடல் காட்சியில் சிவகார்த்திகேயனின் படத்தை காட்டியிருக்கிறோம். எம்..ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் எல்லாரையும் காட்டி விட்டார்கள்.. என் சமகாலக் கலைஞன் சிவகார்த்திகேயனை நான் கொண்டாடக் கூடாததா? அதுதான் கொண்டாடி இருக்கிறேன். ‘ரெமோ’வும் ஓடட்டும் ‘றெக்க’யும் ஓடட்டும்.. இரண்டையும் ஒப்பிட வேண்டாம்.”

இனி விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்ல, அவர்களது ரசிகர்களுக்கும் ஆரோக்கியமான போட்டி மட்டுமே இருக்கும் என நம்பலாம்.