“உனக்கேன்யா இந்த வேண்டாத வேலை” ; ‘ஒரு குப்பை கதை’ பட விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு..!

oru kuppai kathai sk

பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி..

மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.

இந்த விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, “குப்பை அள்ளக்கூடிய மனிதர்களை கதையின் நாயகர்களாக்கியதற்கும், அந்த கதாநாயகனாக தினேஷ் மாஸ்டரை நடிக்க வைத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.. குப்பையில் தான் என்னென்ன கிடக்கின்றன..? குப்பை ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும். தினேஷ் மாஸ்டர் என் படங்களுக்கான நாயகன் போல தெரிகிறார். அவர் மூலமாகத்தான் “தர்மதுரை ‘மக்க கலங்குதப்பா’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது” என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “நான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் எப்படி சந்தானம் தொடர்ந்து எனது படங்களில் இடம்பிடித்தாரோ அதே போல தினேஷ் மாஸ்டரும் என் படங்களில் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். மாஸ்டராக இருக்கும்போது சரியான நேரத்திற்கு வந்தவர், இப்போ ஹீரோ ஆனதும் லேட்டா வர ஆரம்பிச்சுட்டார் போல.. தப்பான படங்கள் கொடுத்தால் திட்டுகிறீர்கள்.. கழுவி ஊற்றுகிறீர்கள். அதே சமயம் நல்ல படங்களை கொடுக்கும்போது நீங்கள் எங்களுக்கான வரவேற்பை கொடுங்கள்.. இல்லாவிட்டால் எங்களுக்கும் கோபம் வரும்” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “இந்த விழாவில் கலந்துகொள்வது என் கடமை. இதன்மூலம் தான் தினேஷ் மாஸ்டருக்கு கைமாறு செய்யமுடியும். விஜய் டிவி ஷோவுல ஆடும்போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் என கிண்டலடித்தேன்.. ஆனால் எதிர்நீச்சல் படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார்.. ஒரு துறைல இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும் போது உனக்கு ஏன்ய்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள்.. அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு போக வேண்டும்..நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப்படத்தை வாங்கியிருப்பது, மற்றவர்கள் எல்லாம் இந்தப்படத்தில் உங்கள் படத்தை பாராட்டுவது என 5௦ சதவீதம் தாண்டி விட்டீர்கள்.. மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் நூறு சதவீதம் வெற்றியை அடைவீர்கள்” என வாழ்த்தி பேசினார்