“அவளும் நானும்.. நானும் அவளும்” ; அவள்’ பட அனுபவம் பேசும் சித்தார்த்..!

aval siddarath

ஒரு படைப்பாளியாக என்றுமே தன்னை அடையாளம் காட்டி கொள்பவர் நடிகர் சித்தார்த். சினிமா மீதான அவரது காதலும், அதில் அவருக்கு இருக்கும் தேடலின் அடுத்த பரிமாணம், அவரது அடுத்த படமான ‘அவள்’ படத்தில் புது மாதிரியாக வெளிப்பட இருக்கிறது.

திகில் படமான ‘அவள்’ வரும் நவ-3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. கதாநாயகனாக மட்டும் இல்லாமல், இந்தப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இப்படத்தின் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். ‘அவள்’ படத்தில் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து சித்தார்த் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“திகில் படங்களின் தீவிர ரசிகனான எனக்கு இந்திய சினிமாவில் நம்மை உண்மையிலே பயமுறுத்தும் பேய் படங்கள் நிறைய வரவில்லை என்ற வருத்தம் என்றுமே இருந்தது. இதனாலேயே நானும் மிலிண்ட் ராவும் ‘அவள்’ படத்தை செய்ய முடிவெடுத்தோம்.

நீண்ட கால நெருங்கிய நண்பர்களான. நானும் மிலிண்ட் ராவும், மணி ரத்னம் சாருக்கு உதவி இயக்குனர்களாக ஒரே சமயத்தில் சேர்ந்தோம். நிஜ வாழ்க்கை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை ‘அவள்’. இக்கதை, பொதுவாக திகில் படங்கள் மற்றும் திகில் படங்களை பற்றிய மக்களின் மனநிலையை பற்றி நிறைய ஆராய்ச்சிகளை நாங்கள் மேற்கொண்டோம்.

கடந்த சில காலமாகவே திகில் படங்கள் பற்றிய கண்ணோட்டம் மக்களிடையே மாறியுள்ளது. இதனை மாற்றி ஹாலிவுட்டை மிரட்டிய ‘காஞ்சூரிங்’ போன்ற படங்களுக்கு இணையான திகில் படத்தை தர நானும் மிலிண்ட் ராவும் நினைத்தோம். இந்த எண்ணத்தில் பிறந்த படம் தான் ‘அவள்’. இது பார்ப்பவர்களை பயத்தில் உறையவைக்கும் ஒரு தீவிரமான திகில் படம்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அதுல் குல்கர்னியுடன் நடித்துள்ளேன். அவரது அர்ப்பணிப்பும், இப்படத்திற்கான அவரது சிந்தனைகளும் பெரும் பலமாக இருந்தது. ஆண்ட்ரியா இப்படத்திற்கு தூணாக இருந்தார். அவரது இந்த கதாபாத்திரம், அவரது சுவாரஸ்யமான நடிப்பு வாழ்வில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும். மொத்தத்தில் ‘அவள்’ படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திகில் விருந்தாக நிச்சயம் இருக்கும்” என்கிறார் பரவசத்துடன் சித்தார்த்.