‘ரஜினிக்கு பிறகு நான் தான்’ – நடிகர் நெப்போலியன் பெருமிதம்

சமீபகாலமாக அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் நெப்போலியன் முதன்முறையாக ஹாலிவுட்டில் ‘டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஹாலிவுட் நடிகை ஷீனாவும் நடித்துள்ளார். இந்த படத்தை பெல் கணேசன் தயாரித்து இருக்கிறார். குடும்ப கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. இதில் நடித்துள்ளது குறித்து நெப்போலியன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.

“என்னைப்போல் தயாரிப்பாளர் பெல் கணேசனும் அமெரிக்காவில் சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார். ஒரு நாள் திடீரென்று அவர் என்னிடம் வந்து நான் ஒரு ஹாலிவுட் படம் தயாரிக்கப்போகிறேன். அதில் உங்களுக்கு ஒரு வேடம் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் நடித்து கொடுக்க வேண்டும் என்றார். அதை ஏற்று நடித்தேன்.

என்னை தவிர இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் வெள்ளைக்காரர்கள். இந்த படத்தில் நான் ஒரு விளையாட்டு ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். ஹாலிவுட் படத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. இந்த படம் ஒரு மணி 35 நிமிடங்கள் ஓடும்.

இந்த கிறிஸ்துமஸ் கூப்பன் படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதல் ஹாலிவுட் படத்தில் ஹீரோயினுடன் நடிக்கவில்லை. ஆனால் இந்தப் படத்தில் ஹீரோயினுடன் நடித்திருக்கிறேன். அடுத்த படத்தில் ஹீரோவானாலும் ஆச்சர்யமில்லை.

தமிழ் சினிமாவில் இருந்து ஆங்கிலப் படங்களில் நடித்தவர்கள் அதிகம் இல்லை. ரஜினிகாந்த் பிளட் ஸ்டோன் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்ததாக சொன்னார்கள். கமல்ஹாசன் அமெரிக்காவில் நிறைய படங்களை படமாக்கியிருக்கிறார். ஆனால் ஆங்கிலப் படங்களில் நடித்ததில்லை. அந்த வகையில் ரஜினிகாந்துக்குப் பிறகு நேரடி ஆங்கிலப் படத்தில் நடித்த தமிழன் நான் தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்ள முடியும்.