ஹைடெக் கார்கள் மீது கண்வைத்த நட்டி..!

bongu

‘சதுரங்க வேட்டை’ என்கிற ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்துவிட்டு, அப்படியே அதைவிட்டுவிட்டு மீண்டும் கேமராமேனாக பணியாற்ற போய்விட்டார் நட்டி.. இருந்தாலும் சில கதைகள் அவரை நடிப்பிற்கு வம்படியாக இழுத்து வந்தன. அதில் ஒன்று தான் ‘போங்கு’. பிரபல கலை இயக்குனர் சாபுசிரில் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றிய தாஜ் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

ஹைடெக்காக கார் திருடும் நால்வரின் கதை தான் இந்தப்படம். அவர்கள் ஏன் திருடர்கள் ஆனார்கள், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? சவால்கள் என்ன என்பதை சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் திரைக்கதையில் சொல்லி இருக்கிறாராம் இயக்குனர் தாஜ்.. படத்தில் ஹீரோ நட்ராஜின்(நட்டி) தோற்றம் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்டைலாக இருக்குமாம்.

கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். இவர் 2014ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஹிந்தியில் இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். படத்தில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு நடத்த ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமைத்தேடி இந்தியா முழுவதும் அலைந்து, கடைசியில் அஹமதாபாத்தில் உள்ள ஒரு ஷோரூமில் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தினார்களாம். அந்த கார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருக்குமாம்.