“‘அம்மா கணக்கு’ எனது தயாரிப்பில் முக்கியமான படம்” ; தனுஷ் பெருமிதம்..!

amma kanakku

ஒரு தயாரிப்பாளராக மாறியபின் தனது படங்களை மட்டுமில்லாமல், நல்ல கதையம்சம் கொண்ட படங்களையும் தொடர்ந்து தயாரித்து வருகிறார் நடிகர் தனுஷ். அந்தவகையில் தற்போது உருவாகி இருக்கும் ‘அம்மா கணக்கு’ தனுஷ் தயாரிக்கும் பத்தாவது படம் ஆகும். இந்தப்படத்தை பெண் இயக்குனரான அஸ்வினி ஐயர் திவாரி என்பவர் இயக்கியுள்ளார்..

இந்தியில் ‘நில் பேட்டி சன்னட்டா’ படத்தை இயக்கிய அஸ்வினி, அதன் ரீமேக்காகத்தான் ‘’அம்மா கணக்கு’ படத்தை தமிழில் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். கதையின் நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். அதிலும் யுவஸ்ரீ என்கிற டீனேஜ் பெண்ணின் அம்மாவாக நடித்துள்ளார்.

இவர் இந்த கேரக்டரில் நடித்தால் நன்றாக இருக்கும் என தேர்வு செய்து அமலா பாலை கன்வின்ஸ் பண்ணியது தனுஷ் தான். வழக்கமாக தான் தயாரிக்கும் படங்களின் விழாக்களில் அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாத தனுஷ் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். அதற்கான காரணத்தையும் அவரே சொன்னார்..

“நான் தயாரித்தாலும் மற்ற படங்களில் என்னை முன்னிருத்தாததற்கு காரணம் அது அந்தப்படத்தில் நடித்த நடிகரின் படமாகவோ, இயக்குனரின் படமாகவோ அறியப்படவேண்டும் என்பதால் தான்.. ஆனால் இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு நானே வருகிறேன் என வாண்டேடாக வந்துள்ளேன்.. காரணம் இந்த ‘அம்மா கணக்கு’ என் மனதுக்கு அவ்வளவு நெருக்கமான படம் என்பதால் தான்.. இந்தப்படத்தில் நடித்துள்ள அமலாபால் இதற்கு முன்னர் இப்படி ஒரு நடிப்பை கொடுத்ததும் இல்லை.. இனிமேலும் கொடுக்கப்போவதும் இல்லை” என படத்தையும் அமலாபாலையும் ஒருசேர பாராட்டினார் தனுஷ்.