அருண்விஜய்யை திசைதிருப்பிவிட்ட அஜித்..!

ஒருவர் ஸ்ட்ரெய்ட்டாக வில்லனாக நடிக்கிறாரா, இல்லை சூழ்நிலை காரணமாக ஹீரோவாக இருந்து வில்லனாக நடிக்கிறாரா என்பதெல்லாம் தேவையில்லை. கௌதம் மேனன் படத்தில் நடித்தால் வில்லனும் கூட இன்னொரு ஹீரோ தான் என்பதுதான் இதுவரை நிரூபிக்கப்பட்ட விதி.

அந்தவகையில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என சொல்வதுபோல அருண்விஜய்க்கு ரசிகர்களின் மத்தியிலும், திரையுலகிலும் மிகப்பெரிய அங்கீகாரத்தை வாங்கித்தந்திருக்கிறது ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம்.. ஆனால் இப்போது நெகட்டிவ் கேரக்டர் ஏற்ற அருண் விஜய்க்கு ஆறு வருடங்கள் முன்பே வில்லனாக நடிக்கும்படி அஜித் ஆலோசனை வழங்கியிருந்தார் என்றால் நம்ப முடிகிறதா..?

ஆனால் உண்மை அதுதான். ஆறு வருடங்களுக்கு முன் ஒரு விழாவில் அருண்விஜய்யை சந்தித்து பேசிய அஜித், “பேசாமல் ஒரு படத்தில் வில்லனா பண்ணுங்க.. வாலியில நான் வில்லனா பண்ணுனதுக்கு அப்புறம் தான் என்னோட திறமை முழுசா வெளிப்பட்டுச்சு” என்று கூறியிருக்கிறார்.

அதற்கேற்ற மாதிரி அஜித் படத்திலேயே அப்படி ஒரு வாய்ப்பு வந்தபோது, முன்பு சொன்னதையே சொல்லி அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார் அஜித். படத்தில் அவரின் ‘விக்டர்’ கேரக்டருக்கு கிடைத்த கைதட்டல்களால் அஜித் கொடுத்த ஆலோசனையின் பலனை இப்போது அறுவடை செய்திருக்கிறார் அருண்விஜய்.