ஆக்சன் – விமர்சனம்

இயக்குனர் சுந்தர்.சி விஷால் கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ள படம்தான் ஆக்சன். சுந்தர்சி படங்களை பொருத்தவரை காமெடி பாதி, ஆக்சன் சென்டிமென்ட் மற்ற விஷயங்கள் மீதி என்கிற கலவையாக தான் இருக்கும்.. ஆனால் இந்த படத்தில் ஒரு புதிய பரிசோதனை முயற்சியாக ஹாலிவுட் பாணியில் முழுக்க முழுக்க அதிரடியான ஆக்சன் படம் ஒன்றை கொடுக்க முயற்சித்திருக்கிறார் சுந்தர்.சி வரத்து இந்த ‘மாத்தி யோசி’ பிளான் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதா..? பார்க்கலாம்.

ராணுவ வீரராக பணிபுரியும் விஷாலின் தந்தை பழ.கருப்பையா தமிழக முதல்வர்.. அண்ணன் ராம்கி துணை முதல்வர், அண்ணி சாயாசிங், முறைப்பெண் ஐஸ்வர்ய லட்சுமி என கலகலப்பான குடும்பம்.. வடநாட்டு அரசியல் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க நினைக்கும் பழ கருப்பையா, தமிழகத்தில் கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தை நடத்தும்போது வடநாட்டு தலைவர் குண்டுவெடிப்பில் மரணமடைகிறார்.. இதற்கு கரணம் ராம்கி தான் என குற்றச்சாட்டு எழ, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.. அந்த வெடி விபத்து நெரிசலில் ஐஸ்வர்ய லட்சுமியும் பலியாகிறார்.

இதன் பின்னணியில் உள்ள உண்மையை ஆராய முயற்சிக்கும் விஷாலுக்கு இந்த வெடிவிபத்து திட்டமிட்ட சதி என்பதும் ராம்கி, ஐஸ்வர்ய லட்சுமி இருவருமே கொலை செய்யப்பட்டு இறந்தார்கள் என்கிற திடுக்கிடும் உண்மையும் தெரியவருகிறது. இதன் பின்னணியில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் இருக்கிறார் என்பதை அறிந்து அவரை தேடிக் கண்டுபிடிக்க வெளிநாட்டுக்குச் செல்லும் விஷாலுக்கு இந்த குற்ற பின்னணியில் பல வருடங்களாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் இருக்கிறான் என்கிற அதிர்ச்சிகரமான உண்மையும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் விஷால் தனது தோழியும் சக ராணுவ வீரருமான தமன்னாவுடன் இணைந்து குற்றவாளியை தேடிக்கண்டுபிடிக்க கிளம்புகிறார். அந்த தீவிரவாதியை இந்தியா கொண்டு வந்து நிறுத்தி தனது அண்ணன் மீது எந்த குற்றமும் இல்லை என நிரூபிக்க முயற்சி எடுக்கும் விஷாலின் எண்ணம் ஈடேறியதா..? இல்லையா..? என்பது மீதிக்கதை

விஷாலின் நடிப்பு வழக்கம்போல ஆக்ரோசமாக இருந்தாலும் அவரது சண்டைக்காட்சிகள் இந்தப்படத்தில் ஸ்டைலிஷ் ஆகவும் புதுமையாகவும் இருப்பது உற்சாகத்தை தருகிறது.. குறிப்பாக வெளிநாடுகளில் பரபரக்கும் சேஸிங் காட்சிகளின் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் விஷால்.. இடைவேளையின்போது அந்தப் பெண் வில்லியை அவர் துரத்திப் பிடிக்கும் காட்சி கைதட்டலை அள்ளுகிறது.

முறைப்பெண்ணாக வரும் ஐஸ்வர்ய லட்சுமி ஏதோ பேருக்கு வந்து போகிறார் அவ்வளவுதான்.. அதேசமயம் ஆக்சன் காட்சிகளிலும் தூள் பரத்தி, ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி கொள்கிறார் தமன்னா.. அவர் நினைத்தால் அலட்டிக்கொள்ளாமல் நடிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க முடியும்.. ஆனால் ஆக்சன் படத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்க ஒரு தனி தைரியம் வேண்டும்.. அதற்காகவே இந்தப்படத்தில் தமன்னாவின் நடிப்பை வெகுவாக பாராட்டலாம்..

அரசியல்வாதியாக இருந்தாலும் எதார்த்தமான நல்ல மனிதராக கொஞ்ச நேரமே வந்து நம்மை சோகத்தில் ஆழ்த்திவிட்டு செல்கிறார் ராம்கி.. பில்டப் தீவிரவாதியாக நடித்திருக்கும் கபீர் துகான் சிங்கிற்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை.. அதே சமயம் அவரது கையாளாக வரும் அகன்ஷா பூரி சும்மா மிரட்டி எடுத்து இருக்கிறார்.. இடைவேளை வரையிலான விறுவிறுப்பு காட்சிகளுக்கு அவரும் பொறுப்பு என்பதை மறுத்துவிட முடியாது.

கொஞ்ச நேரமே வந்தாலும் ஹேக்கராக வரும் யோகி பாபு வரும் காட்சிகள் வழக்கம்போல கலகல பட்டாசு ரகம். அதேபோல விஷாலின் மச்சான் ஆக வரும் ஆர்ஜே சாராவையும் நறுக்குத் தெரித்தார் போல ரசிக்கும்படியாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. குறிப்பாக பெங் மேனேஜரை சார திசை திருப்பும் காட்சிகள் கலகலப்பு. பழ.கருப்பையா, சாயாசிங், ராணுவ அதிகாரியாக சாயாஜி ஷிண்டே, இந்திய ஏஜென்டாக நடித்துள்ள ஆரவ் சவுத்ரி, போலீஸ் அதிகாரி பரத் ரெட்டி என பலரும் தங்கள் வேலைகளை சரியாக செய்திருக்கிறார்கள்.. குறிப்பாக பாகிஸ்தான் போலீஸ் ஜெனரல் ஆக நடித்துள்ள நபரும் நம்மை ரொம்பவே கவர்கிறார்.

பாடல்கள் தான் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்லலாம்.. அந்த குறையை பின்னணி இசையில் ஓரளவுக்கு ஈடு செய்து இருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.. பரபரக்க வைக்கும் வெளிநாட்டு சேசிங் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் டட்லிக்கு மூன்று மடங்கு வேலை கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி.. ஆனால் அதை மிக நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார் டட்லி. ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு படத்தை எந்தவித குழப்பமும் இல்லாமல் நகர்த்திச் செல்கிறது.

காமெடி கிங் என முத்திரை குத்தப்பட்ட இயக்குனர் சுந்தர்.சி தன்னால் ஆக்சன் படமும் செய்யமுடியும் என்பதை நிரூபிப்பதற்காக இந்த படத்தை இயக்கியுள்ளார் என்று தெரிகிறது.. தனக்கு தானே வைத்துக் கொண்ட இந்த சோதனையில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.. படத்தின் முதல் கால் மணி நேரம் மட்டுமே மெதுவாக நகர்ந்தாலும் ராம்கி தற்கொலைக்கு பின்பு படம் ஜெட் வேகத்தில் சூடுபிடிக்கிறது இடைவேளைக்கு பின்பு வரும் சேஸிங் காட்சிகளிலும் நாடு விட்டு நாடு செல்லும் காட்சிகளிலும் சற்று லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் அதையும் மீறி அடுத்து என்ன ஆகுமோ என்கிற டென்ஷனுடனேயே கடைசி 20 நிமிட கிளைமாக்ஸில் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார் சுந்தர்.சி அந்த வகையில் சுந்தர்.சி-விஷால் கூட்டணி இந்த ஆக்சன் படத்தில் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறது என்பதே உண்மை.