அபியும் அனுவும் ; விமர்சனம்

abiyum anuvum movie review

அழகான காதல் கதை.. ஆனால் இதற்குள் இப்படி ஒரு இடியாப்ப சிக்கல் ஒளிந்துள்ளதா என பதைபதைக்க வைக்கும் விதமாக இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்..

பெற்றோர் வெளிநாட்டில் வசிக்க, சென்னையில் தனியாக வசிக்கிறார் டொவினோ தாமஸ் (அபி)., ஊட்டியில் தனது தாய் ரோகிணியுடன் வசிக்கிறார் சமூக சேவையில் நாட்டமுள்ள பியா (அனு).. பேஸ்புக் மூலம் பியாவின் குணாம்சங்கள் டொவினோவை ஈர்க்க, பியாவின் மீது காதலாகி, ஒருகட்டத்தில் ஊட்டிக்கே வந்து காதலை சொல்கிறார். பியாவும் காதலை ஏற்றுக்கொள்ள, மறுநாளே இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.. ரோகிணி தனது அலுவலக வேலையாக டவர் இல்லாத மலை கிராமத்தில் சிக்கிக்கொள்ள அவர் இல்லாமலேயே இந்த திருமணம் நடக்கிறது., டொவினோவின் பெற்றோரோ வீடியோ சாட்டிங் மூலமாக மணமக்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள்..

திரும்பி வந்த ரோகிணி மணமக்களை ஆசீர்வதிக்க, கணவனுடன் சென்னை பயணப்படுகிறார் பியா. இருவரும் திகட்ட திகட்ட காதல் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.. அதன் காரணமாக பியா கருத்தரிக்க, மருமகளை பிரசவம் வரை கவனித்துக்கொள்ள தங்களது கிராமத்து ஆயாவை சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர் டொவினோவின் பெற்றோர். அதேசமயம் விஷயமறிந்து மகளை பார்க்க சந்தோஷத்துடன் சென்னைக்கு வருகிறார் ரோகிணி. ஆயாவும் ரோகிணியும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியாகிறார்கள்..

வெளிநாட்டில் இருக்கும் டொவினோவின் பெற்றோருக்கு ஆயா மூலமாக ஏதோ தகவல் போக, அவர்கள் அங்கிருந்தபடியே டொவினோவை அழைத்து, பியாவுடனான திருமணம் செல்லாது என்றும் கருவை கலைத்துவிட்டு பியாவை செட்டில் பண்ணி அனுப்பும்படியும் கூறுகின்றனர்.. அவர்கள் கிளம்பி வருவதற்குள் இந்த களேபரத்தில் ரோகிணி மரணத்தை தழுவுகிறார்..

திருமணத்தின்போது மகிழ்ச்சியுடன் சம்மதித்த டொவினோவின் பெற்றோர் இப்போது இப்படி கூற என்ன காரணம், அவர்கள் அப்படி சொன்னபின் டொவினோவின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன, இருவர் வாழ்க்கையில் புயல் வீச செய்த அந்த காரணம் தான் என்ன என பல கேள்விகளுக்கு மீதிப்படம் விடை சொல்கிறது.

இடைவேளை வரை அருமையான காதல் கதையுடன் பயணிக்க வைத்து, அதன்பின் குடும்ப சூழல், உணர்ச்சிகளின் பிடிக்குள் நம்மை இழுத்துசெல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி.

அபியாக (தமிழுக்கு) புதுமகமாக அறிமுகமாகியுள்ளார் டொவினோ தாமஸ். மலையாள நடிகர் என்பதால் நடிப்பில் இயல்பான யதார்த்தம் தெரிகிறது. குறிப்பாக இடைவேளைக்குப்பின் மனதில் பெரிய வலியுடன் இருக்கும் இளைஞனாகவே அவர் மாறிவிடுகிறார். அவருக்கு ஈடுகொடுத்து படம் முழுதும் பின்னி பெடலெடுக்கிறார் பியா. இடைவேளைக்குப்பின் நம் பரிதாபம் முழுவதையும் தன் பக்கம் திரும்பச்செய்து விடுகிறார் பியா.

இருதலைக்கொள்ளி எறும்புபோல கனமான கதாபாத்திரம் ரோகிணி.. நன்றாகவே சுமந்திருக்கிறார். டொவினோவின் குடும்ப ஆதரவு பெண்மணியாக சுகாசினி, அவரது கணவராக சில காட்சிகளில் வரும் பிரபு இருவரும் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்… மகனை பற்றி போனில் மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டு வெளிநாட்டிலேயே வசிக்கும் டொவினோவின் பெற்றோர் மீது நமக்கு எரிச்சல் வருகிறது என்றால் அவர்கள் நடிப்பில் பாஸ்மார்க் வாங்கிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்.

தரண்குமாரின் பின்னணி இசையும் அகிலனின் ஒளிப்பதிவும் படத்திற்கான மூடுக்குள் நம்மை பொருந்த வைக்கின்றன. வாடகைத்தாய் விவகாரம் இப்படி ஒரு சிக்கலை எழுப்புமா என்கிற கோணத்தில் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி. இந்தப்படத்தில் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்னவென்றால், காதலன் காதலை சொன்ன மறுநாளே, அதிலும் அப்போதுதான் பார்த்த காதலனை, அம்மாவும் ஊரில் இல்லாத நிலையில் மறுநாளே திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன..? ட்விஸ்ட்டுக்காக கதைக்கு அது அவசியம் என்றாலும், பியாவின் கேரக்டருக்கு அப்படி என்ன அவசியம், அவசரம் வந்தது…? இந்த இடத்தில் இயக்குனர் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார்.

மற்றபடி இந்தப்படத்தில் பார்த்து ரசிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருப்பதால் தாராளமாக டிக்கெட் போடலாம். ,