ஆருத்ரா விமர்சனம்

aaruthra review 1

சில பெரிய மனிதர்கள் அவ்வப்போது கடத்தப்பட்டு வேறு மாநிலங்களில் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகள் குறித்து விசாரிக்க தனியார் துப்பறியும் நிபுணரான பாக்யராஜ், காவல்துறையால் நியமிக்கப்படுகிறார். விசாரணையில் அவரது வீட்டு மாடியில் குடியிருக்கும் பா.விஜய் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது..

பழங்கால பொருட்கள் விற்பனை செய்யும் பா.விஜய்க்கு, இப்படிப்பட்ட கொலைகள் செய்யவேண்டிய அவசியம் எப்படி வந்தது, கொலைகளை எல்லாம் வித்தியாசமான முறையில் செய்வதற்கு காரணம் என்ன என்பதற்கு வலியுடன் கூடிய பிளாஷ்பேக் விடைசொல்கிறது.

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக இந்த ஆருத்ரா உருவாகியுள்ளது.. பா.விஜய் முன்னை விட நடிப்பில் நன்றாகவே இம்ப்ரூவ் ஆகியிருக்கிறார். பாக்யராஜ், ஞானசம்பந்தன், ஜோ மல்லூரி ஆகியோரின் நடிப்பில் செயற்கையோ செயற்கை. ஆனால் ஸ்தபதியாக நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பு படு பாந்தம்.

அந்நியன் கருடபுராணம் பாணியில் அயோக்கியர்களை கொலைசெய்வது ஓகே.. ஆனால் அவ்வளவு சிரமப்பட்டு கொலைகளை செய்யவேண்டுமா என்ன..? ஒரு தனி ஆளாக ஒரு பெட்டியை இழுத்துக்கொண்டு மலை உச்சிக்கு சொல்வதெல்லாம் சாத்தியமா என்ன..?

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் தற்காத்துக்கொள்ள குழந்தைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் பா.விஜய், அண்ணன்-தங்கை பாசக்காட்சிகளை இன்னும் கொஞ்சம் டீசண்டாக படமாக்கி இருக்கலாமோ என தோன்றுகிறது. நரித்தனமான நடிப்பை வழங்கியிருக்கும் விக்னேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளை அவ்வளவு டீடெயிலாக காட்டியிருக்கத்தான் வேண்டுமா என்ன..? தக்‌ஷிதா, சஞ்சனா சிங், சோனி சரிஷ்டா என்று 3 கதாநாயகிகளில் பா.விஜய்யின் தங்கையாக வரும் தக்ஷிதா நம்மை கவர்கிறார்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் பாக்யராஜ் மற்றும் அவரது உதவியாளர் மொட்ட ராஜேந்திரன் இருவரும் பெண்களை அணுகும் காட்சிகளை கிளுகிளுப்பாக வைத்திருப்பது நகைமுரண்.

இப்படி குறைகள் ஆங்காங்கே இருந்தாலும் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என்பதால் ஆருத்ரா பட இயக்குனராக பா.விஜய்யை பாராட்ட வேண்டும்.