ஆரி – ஐஸ்வர்யா தத்தா படம் ; ‘டிக் டாக்’கில் ப்ரொமோஷன் வீடியோ ரிலீஸ்

aari-aiswarya dutta 1

ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ப்ரொமோஷன் வீடியோ ‘டிக் டாக்’ தளத்தில் ரிலீஸ் செய்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் தலைப்பும் டிக் டாக் தளத்தில் ரிலீஸாக உள்ளது. ‘அய்யனார்’ என்ற படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் இந்தப் படத்தினை இயக்குகிறார்.

இந்த ப்ரொமோஷன் வீடியோ ரிலீஸ் குறித்து பட நாயகன் ஆரி கூறியதாவது, “இந்திய அளவில் ஏன் சர்வதேச அளவில் ஒரு படத்தின் ப்ரொமோஷன் வீடியோ டிக் டாக்கில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. எல்லா மனிதர்களும் தங்களோட வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை கடந்தே வந்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்களுடைய காதலை முதலில் கடக்கும் பருவம் இளமைப் பருவம் என்பதால் இன்னும் சுவாரஸ்யமாக உணர்வார்கள். அப்படிப்பட்ட காதலை மையமாக வைத்து சுழலும் படம்தான் இது. ஆகவே, இப்படத்தினை எங்கள் காதல் கதை என்று சொல்லாமல் உங்கள் காதல் கதை என்று சொல்வதிலேயே படக்குழுவினராக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

காதலிக்கும் நாம் கால ஓட்டத்தால் மாறுவோம். ஆனால் காதல் எப்போதும் மாறாது. எல்லா காலகட்டத்திலும் அது இளமையாகவே இருக்கும். அப்படி ஒவ்வொருவருக்குக்குள்ளும் உலாவும் காதலை பெரிய அளவில் கொண்டாடுகிற இன்றைய இளைஞர்கள் அதிகம் கூடும் இடம் சமூக வலைதளமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் தங்களது காதல் விஷயத்துக்காக பெரிதும் பயன்படுத்தும் ‘டிக் டாக்’ தளத்திலேயே படத்தின் ப்ரொமோஷன் வீடியோவை வெளியிட்டோம். அடுத்து விரைவில் படத்தின் தலைப்பும் அறிவிக்க உள்ளோம். அதையும் இதே போல டிக் டாக் தளத்திலேயே வெளியிட உள்ளோம். இனிமேல் இந்தமாதிரி படத்தின் பர்ஸ்ட் லுக், இசை, பாடல்கள் எல்லாம் இந்த தளத்தில் வெளியாவது அதிகரிக்கும்!’’ என்கிறார், படத்தின் நாயகன் ஆரி.