ஆண் தேவதை – விமர்சனம்

aan devathai review

வாழ்வதற்காக வேலை பார்க்கிறோமா, வேலை பார்ப்பதற்காக வாழ்கிறோமா என்கிற மிகப்பெரிய கேள்வியை இந்த ஆண் தேவதை படம் பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் எழுப்பியுள்ளார் இயக்குனர் தாமிரா. அப்டி என்ன கதை இது..?

மெடிக்கல் ரெப்பான சமுத்திரக்கனி, ஐடி வேலை பார்க்கும் ரம்யா பாண்டியன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் இருவருமே வேலைக்குப்போவதால் குழந்தை கவனிப்பில் சிக்கல் ஏற்படுகிறது. யாரோ ஒருவர் வேலையை விடலாம் என சமுத்திரக்கனி கூற, ரம்யா தன்னால் வேலையை விடமுடியாது என பிடிவாதம் காட்டுகிறார். அதனால் சமுத்திரக்கனி தனது வேலையை உதறிவிட்டு குடும்ப பொறுப்பை கவனிக்க ஆரம்பிக்கிறார்,

ரம்யா பாண்டியன் தனது வேலையில் பதவி உயர்வு, வெளிநாட்டு பணி என உயரம் தொட முயற்சிக்கிறார். ஆனால் அவரது வாழ்வியலை சமுத்திரக்கனி மற்றும் குழந்தைகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்குளும் ஈகோ மோதல் உருவாகிறது. ஒருகட்ட்டத்தில் மனைவியால் அவமானப்படும் சமுத்திரக்கனி, தனது மகளை தூக்கிக்கொண்டு வெளியேறுகிறார்.

அப்படி வெளியேறிய சமுத்திரக்கனி சாதித்தது என்ன..? கேரியர் தான் பெரிதென நினைத்த ரம்யாவுக்கு, மகன் மட்டும் தன்னிடம் இருக்கும் நிலையில் அவர் விரும்பியபடி வாழ்க்கையை நகர்த்த முடிந்ததா..?இருவரும் மீண்டும் இணைவதற்கான காலச்சூழல் உருவானதா என்பதுதான் மீதிக்கதை.

சமுத்திரக்கனியின் குணாதிசியம் இன்றைய பல ஆண்களிடம் நாம் காண முடியாத ஒன்று.. அப்படி எல்லோரும் இருந்துவிட்டால் குடும்பம் நன்றாக இருக்குமே என்பதை தனது நடிப்பால் காட்சிக்கு காட்சி நம்மை நினைக்க வைத்து விடுகிறார். மனைவியின் அடாவடி நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுத்து குடும்பத்தை நடத்துவது, ஒருகட்டத்தில் தன்மானத்தை விட்டுகொடுக்க முடியாமல் வீட்டிளிருண்டு வெளியேறி, இந்த பரந்த சென்னையில் இருக்க ஒரு இடம் கிடைக்காமல் நாதியின்றி அலைவது என ஒரு சராசரி ஆணைவிட, ஒரு சராசரி தகப்பனை விட பரிதவிக்கும் காட்சியில் அவர் ஆண் தேவதையாக மாற முயற்சித்திருக்கிறார்.

ஜோக்கரில் பார்த்த கிராமத்துப்பெண்ணா இவர் என தோற்றத்திலும் மாறுபட்ட நடிப்பிலும் நம்மை படம் முழுக்க பிரமிக்க வைக்கிறார் ரம்யா பாண்டியன். தனது கேரியரில் அடுத்தடுத்து சாதிக்க வேண்டும் என்கிற நினைப்பில் இவர் கணவன், குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் செயல்களால் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து நடிப்பில் பாஸ்மார்க் வாங்குகிறார். ஆனால் இறுதிவர, தனது நிலையில் இருந்து இறங்கி வராமல், தனது கெத்தை விட்டுக்கொடுக்கொடுக்க முடியாமல் தடுமாறுவது ஐடி நிறுவன வேலைக்கு செல்லும் இன்றைய பல இளம்பெண்களின் முகமாகவே வர் தெரிகிறார். வெல்டன் ரம்யா.

குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ள கவின்பூபதி, மோனிஷா இருவரின் நடிப்பில் தான் எவ்வளவு பக்குவம்..? படம் முழுக்க அசத்தியிருக்கிறார்கள்.. ஆடம்பர வாழ்க்கையால் அவலத்தை சந்திக்கும் சுஜா வாருணி, பெண்களின் வீக்னெஸ் அறிந்து அவர்களை கபளீகரம் செய்ய தூண்டில் விரிக்கும் உயரதிகாரி அபிஷேக், அபார்ட்மென்ட் வீடுகளில் வசிக்கும் ஏதோ ஒரு சந்தேகப்பிராணியின் உருவமாக இளவரசு, ஆணாதிக்கம் பேசி வீட்டு மாப்பிள்ளையாக மாறும் காளி வெங்கட், புல்லட் ராவுத்தாராக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவி, வங்கிக்கடனை வசூலிக்க, குடும்ப பெண்களிடம் அடாவடியாக நடந்துகொள்ளும் ஹரீஷ் பெராடி என பலரும் இன்றைய உலகில் நாம் கடந்து செல்கின்ற, நம் வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கின்ற மனிதர்களாகத்தான் தெரிகிறார்கள்.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு நகரத்து மனிதர்களின் வாழ்க்கையை வலியுடன் நம்முள் கடத்துகிறது. அதற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையுடன் துணை நிற்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இன்றைய நவநாகரிக சூழலில் மனிதார்கள் ஒவ்வொருவரும் எதை நல்ல வாழ்க்கை என நினைத்து வாழ்ந்து கொண்டிருகிறார்கள், அதுதான் உண்மையான நிம்மதியான வாழ்க்கையா என்பதை இரண்டு மணி நேர படமாக எடுத்து பட பார்ப்பவர்களை ஒரு சுய அலசலுக்கு ஆட்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தாமிரா..

வீட்டை கவனித்துக்கொள்ள சமுத்திரக்கனி முடிவெடுப்பது அருமை. ஆனால் அதன்பின்னர் மனைவியுடன் அவருக்கு தோன்றும் பிரச்சனைகளுக்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார் என்பதையும் நாம் மறுக்க முடியாது. குறிப்பாக மனைவியும் குழந்தைகளும் வேலைக்கும் பள்ளிக்கும் சென்றுவிட்ட நிலையில் அவர் வீணாக, சீட்டு விளையாடிக்கொண்டு, வெட்டி அரட்டையில் பொழுதை கழிப்பதாக காட்டியிருப்பது ஏற்புடையதாக இல்லை.

அதேசமயம் நகரத்தில் வசிக்கும் இன்றைய நடுத்தர வர்க்கத்தினர், குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் கணவன்-மனைவி இந்தப்படத்தை பார்த்தால் தாங்கள் தங்கள் வாழ்க்கையில் எங்கே எப்படி இடறுகிறோம், தடுமாறுகிறோம் என்பதை உணர்ந்துகொள்ளும் வாய்ப்பை இந்தப்படம் உருவாக்கியுள்ளது.