ஆம்பள – விமர்சனம்

 

சண்டைக்கோழியாக இருக்கும் அத்தையை சமாதானப்படுத்தி, மருமகனாகும் ‘ஆம்பள’ – இதுதான் படத்தின் ஒன்லைன். மூன்று தங்கைகளை விட்டு தந்தையை கொன்றார் என்கிற கொலைப்பழியுடன், பிரிந்து போன அண்ணன் பிரபுவுக்கு விஷால், வைபவ், சதீஷ் என மூன்று மகன்கள். அண்ணனை வெறுக்கும் தங்கைகளான ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா இவர்களின் மகள்களை, தந்தையின் ஆசைப்படி இந்த மூவர் கூட்டணி எப்படி திருமணம் செய்கிறார்கள் என்பதை தனது அக்மார்க் பிராண்டில் அசத்தலாக படமாக்கியிருக்கிறார் சுந்தர்.சி.

சுந்தர்.சி டைரக்ஷனில் இரண்டு படங்கள் சேர்ந்தாற்போல் நடித்தால் எப்படிப்பட்ட சீரியஸான ஆக்ஷன் ஹீரோவையும் காமெடி வட்டத்திற்குள் கொண்டுவந்துவிடுவார். இதில் விஷாலுக்கும் அந்த ட்ரீட்மென்ட்டை அழகாக செய்திருக்கிறார். ஆக்ஷன், காமெடி, டான்ஸ் என எல்லா ஏரியாவிலும் விஷாலின் பெர்பாமன்ஸ் பர்பெக்ட்..

இரண்டாவது ஹீரோ என சொல்லும் வகையில் போலீஸாக வரும் சந்தானம் சும்மா வீடுகட்டி அடித்திருக்கிறார்.. படத்தின் முதல் அரைமணி நேரமும் கடைசி அரைமணி நேரமும் சந்தானத்தின் ராஜாங்கம் தான். குறிப்பாக விஷாலின் காதல் ஒர்க் அவுட் ஆவதற்கும் சந்தானத்தின் வேலை போவதற்கும் கொடுத்திருக்கும் லிங்க் புது வகை காமெடி.

ஹன்ஷிகா, இந்தப்படத்தில் இன்னும் சற்று கூடுதல் அழகுடன் தெரிகிறார் என்பதுதான் அவரைப்பற்றிய சிறப்பு செய்தி. அழகு அத்தைகளாக வரும் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா எல்லோருக்குமே ஷார்ட் அன்ட் ஸ்வீட் கதாபாத்திரங்கள்.. பாசத்தந்தையாக பிரபு, தம்பிகளாக வரும் வைபவ், சதீஷ், கமிஷனர் மனோபாலா, விஷாலின் வலது கையான ராஜ்கபூர் என எல்லோருக்கும் அளவெடுத்து தைத்த சட்டையாக கதாபாத்திரங்கள் பொருந்துகின்றன.

பிரதீப் ராவேத்தின் வில்லத்தனத்திற்கு கூட காமெடி முலாம் தான் பூசியிருக்கிறார்கள். ஹிப் ஹாப்  தமிழா ஆதியின் இசையில் ‘பழகிக்கலாம்’ பாடலுக்கு தியேட்டரில் இளவட்டங்கள் ஆட்டம் போடுகிறார்கள் என்றால், படம் முடிந்து என்ட் கார்டு போடும்போது ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’ ரீமிக்ஸை போட்டு மொத்த ரசிகர்களையும் மூன்று நிமிடம் நிறுத்தி அனுப்பும் ஆதிக்கு ஒரு வெல்கம் பொக்கே.

படம் பார்த்த மறுநாளே இன்னொரு முறை தியேட்டருக்கு போய் படம் பார்க்கும் ஆசையை தூண்டுவதில் சுந்தர்.சி வித்தகர்.. அந்தவகையில் இந்தப்படத்திலும் விஷாலை வைத்து கமர்ஷியல் காமெடி பிரியாணி கிண்டியிருக்கிறார் சுந்தர்.சி. (எப்பா.. அந்த ‘மதகஜ ராஜா’வையும் எப்படியாவது ரிலீஸ் பண்ணி விடுங்கப்பா).

சந்தானத்தின் காமெடியை கச்சிதமான மாலையாக கோர்த்திருக்கும் அவரின் நகைச்சுவை காட்சிகளுக்கு சிரிக்காத ரசிகன் இருந்தால் அவன் வேற்று கிரகத்து ஆளாகத்தான் இருப்பான். இடைவேளைக்குப்பின்  அரசியல் ஏரியாவுக்குள் புகுந்தாலும் அங்கேயும் காமெடி தான் என்பதால் லாஜிக்கும் ஒகே ஆகி விடுகிறது.  வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பது சுந்தர்.சி படங்களுக்காகவே எழுதப்பட்ட பழமொழி தானோ..?

மொத்தத்தில் இந்த ‘ஆம்பள’ – அசத்தல் மாப்பிள்ள..!