‘ஆஹா கல்யாணம்’ இசையமைப்பாளர் தரண்குமாருக்கு கல்யாணம்..!

பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படம் மூலமாக தமிழ்சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்தவர் தரண்குமார். அந்தப்படத்தில் இடம்பெற்ற ‘உன்னைக்கண்டேனே முதல் முறை’ பாடலை அவ்வளவு சீக்கிரம் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அந்தப்பாடலில் தன் இசையால் விளையாடி இருப்பார் இசையமைப்பாளர் தரண்குமார்.

நானி நடித்த ‘ஆஹா கல்யாணம்’, சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ உட்பட 24 படங்களுக்கு இசையமைத்துள்ள தரண்குமார், தற்போது 25வது படமாக ‘பிஸ்தா’வுக்கு இசையமைத்து வருகிறார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் திருமண பந்தத்திலும் அடியெடுத்து வைக்கிறார் தரண்குமார்.

இவருக்கும் ஆகம், நகர்வலம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ள தீக்சிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 15-ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெறுகிறது. செப்டம்பர் 16-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் செய்து வந்த தீக்சிதா தொடர்ந்து சினிமாவில் காஸ்டியூம் டிசைனராக தொடரப் போகிறாராம்..