ஆடாம ஜெயிச்சோமடா – விமர்சனம்

 

கால் டாக்சி ட்ரைவர் கருணாவுக்கு கிரிக்கெட் பெட்டிங் புக்கியான பாலாஜியுடன் நட்பு ஏற்படுகிறது. அவரால் தனது கடன்களை எல்லாம் தீர்த்து விடலாம் என கருணா நினைக்கும் வேளையில், ஹோட்டல் அறையில் இருக்கும் பாலாஜி மர்மமாக இறக்கிறார்.

பெட்டிங்கில் இறங்கிய தியேட்டர் ஓனரான ஆடுகளம் நரேன் குரூப், பேட்டிங் ரகசியம் கருணாவுக்கு தெரிந்திருக்கலாம் என கருணாவை தேடுகிறது. இன்னொரு பக்கம் கமிஷனர் கே.எஸ்.ரவிகுமாரின் உத்தரவுப்படி போலீஸ் அதிகாரியான சிம்ஹாவும் கருணாவுக்கு வலை வீசுகிறார்.. வலையில் சிக்கிய கருணாவை வைத்து பெட்டிங்கை தடுத்தார்களா?, பாலாஜியின் கொலைக்கான மர்மத்தை கண்டுபிடித்தார்களா என்பது மீதி கதை.

கதைநாயகனாக புரோமோஷன் ஆகியிருக்கும் கருணாகரனின் டைமிங் சென்ஸ் காமெடி இந்தப்படத்தில் பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இவருக்கும் விஜயலட்சுமிக்கும் அட்டாச்டு பாத்ரூம் விஷயத்தில் காதல் ஏற்படுவது கிச்சுகிச்சு..

போதாதற்கு வெயிட் பண்ணி குற்றவாளியை கண்பிடிப்போம் சார் என போலீஸாக அட்ராசிட்டி பண்ணும் சிம்ஹாவின் காமெடி வேறு சேர்ந்துகொள்ள கேட்கணுமா? ஹோட்டலில் சிக்கிய டைரியை வைத்து இறந்துபோன பாலாஜிக்கு இவராக ஒரு  பிளாஸ்பேக் உருவாக்கும் விதம் வயிறுகுலுங்க சிரிக்கவைக்கிறது.

கிரிக்கெட் சூதாட்ட புக்கியாக வரும் பாலாஜியின் பரிதாப முடிவு சூப்பர் காமெடி. அட்டாச்டு பாத்ரூம் உள்ளவனை மட்டுமே கல்யாணம் பண்ண விரும்பும் விஜயலட்சுமியின் கொள்கை ரொம்பவே புதுசு. அதிலும் அவர் தரும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டு இருக்கே.. அடடா..!

சிம்ஹாவுடன் சேர்ந்து ஒருபக்கம் கே.எஸ்.ரவிகுமார் காமெடியில் கலக்குகிறார் என்றால், இன்னொரு பக்கம் கான்ஸ்டபிளாக வந்து அவ்வப்போது சின்ஹாவின் காலை வாருகிறார் சேத்தன். இந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் ராதாரவியின் பங்கும் சரியாக கைகொடுத்திருக்கிறது.

மகனை வைத்து படம் எடுத்து அல்லல்படும் தியேட்டர் ஓனராக முதன்முறையாக முழுநீள காமெடியில் இறங்கியிருக்கிறார் ஆடுகளம் நரேன். அவரது மகனாக நடித்திருக்கும் ‘சூறாவளி’யின் காமெடியும் சூப்பர். இடைவேளைக்கு முன் வரும் சேசிங் பாடல் சுவராஸ்யம் தருகிறது.. அனைத்து நடிகர்களுக்குமே யதார்த்தமான காமெடி வசனங்களை வாரி வழங்கியிருக்கிறார் வசனகர்த்தாவாக பொறுப்பேற்றுள்ள நம்ம மிர்ச்சி சிவா.

கருணாகரன், சிம்ஹா, பாலாஜி, விஜயலட்சுமி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன் என பொருத்தமான ஆட்டக்காரர்களை தேர்வு செய்ததிலேயே வெற்றியை உறுதி செய்துவிட்டார் இயக்குனர் பத்ரி.. ஆங்காங்கே ஒரு சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் காமெடி நம் கண்ணை மறைத்து விடுகிறது பாஸ்.. கிரிக்கெட்டில் நடைபெறும் பேட்டிங்கை வைத்து சீரியஸாக இல்லாமல் காமெடியாக கதை பின்னி ஆடாமலேயே ஜெயித்திருக்கிறார்கள்..