80களின் நட்சத்திர நண்பர்கள் கெட் டு கெதர் : 6ஆம் வருட கொண்டாட்டம்..!

எண்பதுகளில் பிரபலங்களாக ஜோடி சேர்ந்து நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய, நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்றுகூடி சந்தித்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்.. அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் வகையில், அப்படி வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஐந்து வருடங்களுக்கு முன் இவர்களின் முதல் சந்திப்புக்கான ஏற்பாடுகளை நடிகைகள் லிசியும், சுகாசினியும் இணைந்து செய்தார்கள். அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் இந்த குதூகல சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.  நேற்று முன் தினம் நடைபெற்ற இந்தவருட கொண்டாட்ட ஏற்பாடுகளை நடிகைகள் சுகாசினி, லிசியுடன் சேர்ந்து குஷ்புவும் கவனித்துள்ளார்,

கொண்டாட்டத்தின் ஹைலைட்ஸ்

இந்தமுறை தீம் கலராக சிவப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததால் இந்த சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருமே சிவப்பு நிற உடையணிந்து வருகை தந்திருந்தனர்..

இந்த வருட சந்திப்பில் 34 நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதில் புதிதாக சேர்ந்துகொண்டவர்கள் என்றால் பாலிவுட்டில் இருந்து ஜாக்கி ஷெராப், பூனம் தில்லான் மற்றும் ஸ்வப்னா, டோலிவுட்டில் இருந்து ஜெயசுதா, மலையாளத்தில் இருந்து ரகுமான், பார்வதி, கோலிவுட்டில் இருந்து சத்யராஜ், பாக்யராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகிய 9 பேர் தான். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் மூவரும் தென்னிந்திய படங்களில் நடித்தவர்கள் என்கிற அடிப்படையில் இந்த சந்திப்பிற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

மாலை 5 மணிக்கு சென்னை ஆலிவ் பீச்சில் உள்ள நீனா ரெட்டி ஹவுசில் ஆரம்பித்த இந்த கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக ஏற்கனவே கடந்த வருடம் நடந்த சந்திப்புகளில் கலந்துகொண்டவர்கள், இந்த வருடம் வந்திருந்த புதியவர்களை வரவேற்று சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட படிகளில் அழைத்து சென்றனர்.

விருந்தினர்களுக்கு வரவேற்பும் ஏற்கனவே நடைபெற்ற சந்திப்புகளின் சில காட்சிகளும் விஷுவலாக காட்டப்பட்டன.

பிரபலங்கள் தங்கள் நண்பர்கள் அனைவருடன் சிங்கிளாக, கூட்டணியாக இணைந்து விதவிதமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அத்தனை புகைப்படங்களையும் சந்தோஷமாக கிளிக் செய்தவர், எண்பதுகளில் இந்த நட்சத்திரங்களின் பேவரைட் புகைப்பட கலைஞரான ஸ்டில்ஸ் ரவி தான்.

மோகன்லால் வழக்கம்போல தனது மேஜிக் ஷோவை நடத்தி கலகலப்பூட்டினார். இந்த வருடம் அவருக்கு மேஜிக்கில் ஒத்துழைப்பு தந்து சக்சஸ் ஆக்கியவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்..

அரங்கத்தில் கரோக்கி எனப்படும் பாடல்களின் இசை மட்டும் ஒலிக்க, நடிகை சுமலதா, ஜெயசுதா, ஜாக்கிஷெராப் ஆகியோர் எண்பதுகளின் புகழ்பெற்ற பாப், வெஸ்டர்ன் பாடல்களை பாடி அசத்தினார்கள்.. சுகாசினியும் மோகன்லாலும் தங்களது பங்கிற்கு தமிழ் மற்றும் மலையாள பாடல்களை பாடினார்கள்.

இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் நடிகை குஷ்பு, வந்திருந்த ஆண் நட்சத்திரங்களுக்கு ஆளுக்கொரு லுங்கி ஸ்பான்சர் செய்தார்.. எல்லாம் லுங்கி டான்ஸ் ஆடுவதற்காகத்தான்.. ஆடி முடிந்ததும் கிட்டத்தட்ட 12 லுங்கிகளை மடித்து பேக் பண்ணிய ஜாக்கி ஷெராப், இந்த வருட கொண்டாட்டத்தின் நினைவாக அவை அனைத்தையும் தன்னுடன் எடுத்துசென்றுவிட்டார் என்பது இன்னொரு ஹைலைட்..

குஷ்பு, சுகாசினி, ஜெயஸ்ரீ மூவரும் பிரெஞ்ச் டான்சர்கள் போல கருப்பு-வெள்ளை உடையணிந்து சிவப்பு நிற இறகுடைய கருப்பு தொப்பியையும் அணிந்து ஆட ஆரம்பித்தனர். ஆடிக்கொண்டே வரிசையாக மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோரை அழைக்க அவர்களும் அசத்தலாக ஆடி கைதட்டலை அள்ளினர்.

விழாவில் சிவப்பு நிறமுள்ள இரண்டு கேக்குகள் வெட்டப்பட்டன.. ஒன்று இந்த ஆறாம் வருட கொண்டாட்டத்திற்கான கேக்.. மற்றொன்று இந்த ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நட்சத்திரங்களுக்கான கேக்..

தங்களது மாநிலத்திற்கும், வெளிநாடுகளுக்கும் அவசர பயணம் மேற்கொள்ளவிருந்த மோகன்லால், ரேவதி, சுமலதா, ஜாக்கிஷெராப், பூனம் தில்லான் ஆகியோரை ஏர்போர்ட்டில் கொண்டுபோய் ட்ராப் செய்து விட்டு வரும் வரை மற்றவர்கள் கொண்டாட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள்.

கிட்டத்தட்ட பத்து நாட்களாக இந்த கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்த நட்சத்திரங்களை மகிழ்ச்சியுடனும் இனிய நினைவுகளுடனும் அனுப்பி வைத்தனர் சுகாசினி, லிசி மற்றும் குஷ்பு மூவரும்.