6 அத்தியாயம் – விமர்சனம்

ஆறு குறும்படங்கள்.. அதாவது 6 அத்தியாயங்கள்.. இவை ஒவ்வொன்றின் நிகழ்வுகளை முதலில் காட்டிவிட்டு இவற்றின் க்ளைமாக்ஸ் காட்சிகளை படத்தின் இறுதியில் காட்டுகிறார்கள். உலக சினிமாவில் முதன்முறையாக இப்படி ஒரு முயற்சியில் வெளியாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களை கவருவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன..? அலசலாம்..

சூப்பர் ஹீரோ ( 1வது அத்தியாயம் ) – டைரக்சன் ; கேபிள் சங்கர்

மிகப்பெரிய விபத்துக்கள் மயிரிழையில் தவிர்க்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் தான் சூப்பர் ஹீரோவாக இருந்து காப்பற்றியதாக கூறும் இளைஞனும் அதனை கண்டறிய முற்படும் மனோதத்துவ டாக்டரும் தான் இந்தக்கதையில் முக்கிய பாத்திரங்கள்..

இனி தொடரும் ( 2வது அத்தியாயம் ) டைரக்சன் – சங்கர் வி.தியாகராஜன்

சிறுமிகளை சீரழிக்கும் ஒரு காமுகன்.. அவனை விசித்திரமாக பழிவாங்க முயற்சிக்கும் சிறுமி.. நடந்தது என்ன..?

மிசை ( 3வது அத்தியாயம் ) – டைரக்சன் ; அஜயன் பாலா

காதலிக்கும் பெண்ணிடம் காதலை சொல்லி அவளால் மறுக்கப்பட்ட சோகத்துடன் அறைக்கு வருகிறான் இளைஞன்.. ஆனால் அவன் உள்ளே இருப்பது அறியாமல், மற்ற இரண்டு அறை நண்பர்களும் அவனை பற்றியும் அவனது காதலியை பற்றியும் பேசுவது கண்டு அதிர்ச்சியடைகிறான். இந்த நேரத்தில் காதலை மறுத்த இளம்பெண் அவனை தேடி அறைக்கு வர… அங்கே என்ன நடந்தது..?

அனாமிகா ( 4வது அத்தியாயம் ) – டைரக்சன் ; சுரேஷ் ஈவ்

நீண்ட நாட்களாக வரச்சொல்லி தன்னை வற்புறுத்தும் மாமாவை தேடி நகரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் அவரது வீட்டிற்கு செல்கிறான் மருமகன்.. அந்த சமயத்தில் மாமா அவசர வேலையாக வெளியே செல்ல நேரிட, அது பேய்வீடு என்பதால் பயப்படாமல் இருக்கும்படியும் சொல்லிவிட்டு செல்கிறார். துணைக்கு பக்கத்து வீட்டு தாத்தாவை கை காட்டிவிட்டு செல்ல, அங்கே இருக்கும் இளம்பெண்ணை கண்டு கிறங்கும் இளைஞன், நடுராத்திரி அவளை தேடிச்செல்கிறான்.. ஆனால்..?

சூப் பாய் சுப்பிரமணி ( 5வது அத்தியாயம் ) – டைரக்சன் ; லோகேஷ்

இளைஞன் ஒருவனுக்கு வித்தியாசமான பிரச்சனை. அவன் எந்த பெண்ணையாவது காதலித்தால், அல்லது எந்த பெண்ணையாவது ஆசையுடன் தொட முயற்சித்தால் ஏதோ ஒரு சக்தி அவனை வேண்டுமென்றே சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தப்பிதமாக நினைக்க வைத்து அவனுக்கு காதலோ, கல்யாணமோ அமையாமல் தடுக்கிறது. அவன் என்ன விதமான சிக்கலில் சிக்கியிருக்கிறான் என ஒரு மலையாள மாந்த்ரீகர் மூலமாக தெரியவரும்போது அப்படி ஒரு அதிர்ச்சி அவனுக்கும் நமக்கும்.. என்னதான் நடந்திருக்கும்..?

சித்திரம் கொல்லுதடி ( 6வது அத்தியாயம் ) – டைரக்சன் ; ஸ்ரீதர் வெங்கடேசன்

ஓவியர் வினோத் வரலாற்று காலத்து பெண்மணியின் ஓவியம் ஒன்றை வரைய முயற்சிக்கிறார். அதற்காக குறிப்பெடுக்க வாங்கிவந்த புத்தகங்களில் கோகிலா என்கிற புத்தகமும் தவறுதலாக வீட்டுக்கு வந்துவிடுகிறது. அது பழங்காலத்தில் வாழ்ந்து, தனைத்தானே அழித்துக்கொண்ட ஒரு பெண்ணின் கதை. அந்தப்புத்தகம் வந்தபின்பு வினோத்தின் வாழ்க்கையில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. ஏன் அப்படி நடக்கிறது..? இதிலிருந்து விடுபட்டு அந்த ஓவியத்தை வினோத்தால் வரைய முடிந்ததா என்பதுதான் மீதிக்கதை.

மேற்கண்ட ஆறு அத்தியாயங்களுக்கும் முடிவை மட்டும் சொல்லாமல் நகர்த்தி, இறுதியில் ஒவ்வொரு அத்தியாயத்திற்குமான க்ளைமாக்ஸை தனித்தனியாக சொல்கிறார்கள். இதில் என்ன ஆறுதல் என்றால் இந்த ஆறு அத்தியாயங்களுமே நேர்த்தியாக போரடிக்காத வகையில், சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக சூப் பாய் சுப்பிரமணி அத்தியாயம் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்.. அதில் அந்த இளைஞனின் காதலுக்கு வில்லனாக இருப்பது யார் என தெரிய வரும்போது இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது.

சூப்பர் ஹீரோ கதையில் இளைஞனாக நடித்துள்ள தமன்குமார் வெகு இயல்பாக, தான் ஒரு சூப்பர் ஹீரோ என்பதாகவே நினைத்துக்கொண்டு தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் டாக்டர் எஸ்.எஸ்.ஸ்டான்லியிடம் தன்னை நிரூபிக்கும் காட்சி செம.. இந்த கான்செப்ட் நிச்சயம் வித்தியாசமான யோசனை என்பதில் சந்தேகமே இல்லை.

சித்திரம் கொல்லுதடி அத்தியாயமும் த்ரில்லிங்கான முயற்சி தான். ஓவியராக வினோத் கிஷன் பொருத்தமான தேர்வு..

மிசை அத்தியாயத்தில் பசங்க கிஷோர், சென்டிமென்ட்டாக உருக வைத்தார் என்றால், அவரது ரூம் மேட்டாக வரும் அந்த இரண்டு நண்பர்கள் தங்களது யதார்த்த முகங்களை மாறி மாறி உடைக்கும் காட்சிகள் செம.

அதே போல அனாமிகா அத்தியாயத்தில் சில காட்சிகள் மிகை என்றாலும் அந்த கற்பனை நன்றாகவே இருக்கிறது. இது தொடரும் அத்தியாயத்தில் இடம்பெறும் காட்சி, சமீபத்தில் மரணதண்டனை வழங்கப்பட்ட இளைஞனின் வாழ்வியலுடன் சம்பந்தப்படுவதால் நம் மனதை ரொம்பவே டிஸ்டர்ப் செய்கிறது.

ஆறு அத்தியாயங்களின் இயக்குனர்களும் தங்களது பங்களிப்பை தனித்தனியாக சரியாகவே செய்திருக்கிறார்கள்.. அதேபோல இந்த ஆறு அத்தியாயங்களையும் அமானுஷ்யம் என்கிற நூலினால் ஒன்றாக இணைத்திருப்பதும் புதிய முயற்சி தான்..

என்ன ஒன்று இந்த ஆறு அத்தியாயங்களுக்குமான க்ளைமாக்ஸ் கடைசியில் ஒன்றாக முடிச்சுப்போடப்படும் என அவர்கள் சொல்லியிருந்த விஷயம் நடக்காமல், தனித்தனியாக ஆளுக்கொரு க்ளைமாக்ஸை மட்டும் வைத்து முடித்ததில் நமக்கு கொஞ்சம் ஏமாற்றமே..

ஆனால் வித்தியாசம் விரும்பிகள், போரடிக்காத படம் வேண்டும் என நினைப்பவர்கள் தாராளமாக இந்தப்படத்திற்கு டிக்கெட் போடலாம்.