3௦ நாளில் 3 படம் ; ஸ்டுடியோகிரீன் அதிரடி..!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்து கார்த்தியை வைத்து படங்களை தயாரித்து வெளியிடுவது ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து நல்ல படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகிறது. ‘அட்டகத்தி’யில் ஆரம்பமான இந்த பயணத்தில் சிறிய படம், பெரிய படம் என பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை.

இந்த மாதம் 1ஆம் தேதி தங்களது சொந்த தயாரிப்பான ‘கொம்பன்’ படத்தை வெளியிட்டு வெற்றிக்கொடி கட்டியவர்கள், அடுத்ததாக மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தையும் ஏப்-17ல் ரிலீஸ் செய்து ஹிட்டடித்தார்கள். இப்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள ‘வை ராஜா வை’ படத்தையும் வரும் மே-1ஆம் தேதி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் வெளியிடுகிறது.

இத்தனைக்கும் சொந்தமாக ரிலீஸ் செய்யும் சக்தி படைத்த ஏ.ஜி.எஸ் நிறுவனமே ஸ்டுடியோகிரீனிடம் தங்களது ‘வை ராஜா வை’ படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றால் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது என்றுதானே அர்த்தம்.

ஆக முப்பது நாட்களில் ஒரு நிறுவனம் மூன்று படத்தை ரிலீஸ் செய்வது என்பது நிச்சயமாக அசாத்திய துணிச்சல் தான். ஆனால் ஞானவேல்ராஜாவோ தொடர் ரிலீஸ்களால், தனது துல்லியமான கணிப்பு தப்பாவதில்லை என தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.