144 – விமர்சனம்

144-Movie-Posters-11

தடையுத்தரவு போடப்பட்ட ஊருக்குள் தங்கத்தை எப்படி கடத்துகிறார்கள் என்பதுதான் 144 படத்தின் மாஸ்டர் பிளான்.

பூமலைக்குண்டு, எரிமலைக்குண்டு என்கிற இரண்டு கிராமங்களுக்குள் அடிக்கடி கண்மாயில் மீன்பிடிப்பதில் தகராறு வர, வருடத்திற்கு ஒருமுறை 144 தடையுத்தரவு போடுவது வாடிக்கையாகிறது. இந்தமுறை விநாயகர் சிலையை கரைப்பதற்குள் தடையுத்தரவு அமலுக்கு வருகிறது.. பலபேரின் கருப்பு பணத்தையும் தங்கத்தையும் பதுக்கிவைத்து பாதுகாத்துவரும் ஊர் முக்கியஸ்தரான மதுசூதனன், பார்ட்டி ஒருத்தரின் தங்க பிஸ்கட்டுகளை சிலைக்குள் மறைத்து வைக்கிறார்..

சில்லறை திருட்டுகளில் ஈடுபடும் சிவாவுக்கு இந்த சிலையை செய்த ராம்தாஸ் (முனீஷ்காந்த்) மூலமாக இந்தவிபரம் தெரியவர, கூட்டுக்’களவாணி’யாக ஓவியாவும் சேர்ந்து தங்கத்தை அபேஸ் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் மதுசூதனனிடம் கார் ட்ரைவராக இருந்துகொண்டே அவரது மகள் ஸ்ருதியை காதலிக்கும் அசோக் செல்வனும் இந்த கடத்தலில் பங்குதாரர் ஆகிறார்..

உண்மையில் தங்கத்தை பறிகொடுத்த கடத்தல் கும்பலுக்கு அது மதுசூதனன் வசம் இருப்பது தெரியவர, அவரை டார்ச்சர் செய்து தங்கத்தை பெற முயற்சிக்கிறார்கள்.. ஆனால் அதற்குள் தங்கம் கடத்தப்பட, அப்புறம் என்ன..? ஒரே தங்கவேட்டை தான். கடைசியில் தங்கம் யாருக்கு சொந்தமாகிறது என்பதை கருத்து சொல்லாமல் காமெடியாக சொல்லி முடிக்கிறார்கள்.

படத்தின் ஹைலைட்டே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு கிராமங்களிலும் போலீஸார் குவிந்துள்ள நிலையில் கடத்தல் தங்கம் அவர்களுக்கு இடையே தெரியாமல் எப்படி வலம் வருகிறது என்பதுதான். அதை தனது காமெடி முயற்சியால் சாதகமாக்கியுள்ளார் சிவா. கூடவே அசோக் செல்வனும் ராமதாஸும் இந்த காமெடி கதையோட்டத்தில் இணைந்துகொள்கிறார்கள்..

சிவாவின் போலீஸ் ஸ்டேஷன் பாசமும் சில்லறை திருட்டுக்களும் அவருக்கான ஏரியா அவருக்க்த்தான் என பறைசாற்றுகின்றன. அசோக் செல்வனும் ஒரு புது ரூட்டில் தரை பண்ணியுள்ளார். அலட்டிக்கொள்ளாத கண்ணழகி ஓவியாவும், சீரியஸ் காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணனும் இந்த கூட்டணியில் சிக்கிக்கொண்டு அவர்கள் அவஸ்தைப்பட்டு நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.

படத்தின் வில்லன் மதுசூதனனா, இல்லை கடத்தல் கும்பல் தலைவனாக வரும் உதயபானு மகேஸ்வரனா என பூவா தலையெல்லாம் போடவேண்டியதில்லை.. மதுசூதனன் உதார் காட்டி டெரர் ஏற்ற முயற்சிக்க, உதயபானுவோ தனது ஹெல்த் செக்கப்புக்காக கூடவே டாக்டரை வைத்துக்கொண்டு விதவிதமாக எதிரிகளை டார்ச்சர் செய்து நம்மையும் சிரிக்க வைக்கிறார். வாய்பேசமுடியாத ராம்தாஸ் அசத்தல்.. அதிலும் சிவாவை வெறுப்பேற்றும் விதமாக ஓவியாவுக்கும் அவருக்குமான சிக்னல் பரிமாற்றம் சரி காமெடி.

குருதேவின் கேமரா கிராமத்தின் இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து வருவதும், குறிப்பாக சுரங்கப்பாதைக்குள் அடிக்கடி போய்வருவதுமாக ‘படம்’ காட்டியிருக்கிறது. ஷான் ரோல்டன் இசையில் விநாயகர் ஊர்வல பாடல் சுபம். பின்னணி இசையிலும் சபாஷ் பெறுகிறார்.

அறிமுக இயக்குனர் மணிகண்டன், இரண்டு கிராமங்களுக்கு இடையேயான பகையை சொல்லிவிட்டு, ஆனால் கதையை அவர்கள் பக்கம் கொண்டுசெல்லாமல், தங்க கடத்தல் பக்கம் திருப்பியபோதே இது வழக்கமான படம் இல்லை என்கிற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.. குறிப்பாக தங்கத்தை திருடி முடிக்கும் வரையிலான கால்மணி நேர காட்சியில் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்.

தங்கம், கிராமம், சுரங்கம் என அடிகடி ஒரே ஏரியாவில் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, கதையும் வலம்வருவது ரிப்பீட் உணர்வை ஏற்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.. ஆனால் வசனங்களிலும் சின்னச்சின்ன காட்சி டீடெய்ல்களிலும் நம்மை அவ்வப்போது சிரிக்கவைத்து விடுவதில் மணிகண்டன் வெற்றிவாகை சூடியிருக்கிறார்…

சி.வி.குமார் தயாரிப்பு என்றால் வித்தியாசமாக ஏதாவது இருக்கும் என நம்பி வருபவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் ‘144’ போடாது.