எஸ்.பி.ஜனநாதனின் லாபம் அவருக்கு மணிமகுடமாக இருக்கும்

சமூக கருத்துக்களை மையப்படுத்தி ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். சமீபத்தில் மூளைச்சாவு அடைந்த அவர் மரணத்தை தழுவினார். அதேசமயம் அவர் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்கிவந்த லாபம் படத்தின் நிலை என்ன, அதன் வேலைகள் முழுதும் முடிந்துவிட்டதா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இந்தநிலையில் ‘லாபம்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

இந்தப் படத்தை 7சி எண்டர்டையின்மெண்ட் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும் ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படம்.

இந்தப் படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தத் தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

அதேசமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சி இருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியிடவுள்ளோம். அனைத்துப் பணிகளையும் முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘லாபம்’ திரைப்படம் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு நிச்சயமாக மணிமகுடமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை”. என அதில் கூறப்பட்டுள்ளது.